கழனி - வளைந்த கதிர்களையுடைய நெல்லின் மூங்கில் போலும் தாள்கள் செறிந்த கழனிகள் பொருந்திய; பிழையா விளையுள் நாடு - தப்பாத வீளைபயனையுடைய நாட்டை; அகப் படுத்து - தன்னடிப்படுத்தி; வையா மாலையர் - ஒரு பொருளாக மதிக்கலாகாத கீழ்மைத் தன்மையுடையவர்களும்; வசையுநர் நாளும் வசையே மொழிபவர்களுமாகிய; கறுத்த - நின்னால் வெகுளப்பட்ட; பகைவர் தேஎத் தாயினும் - பகைவரிடத்தேயிருந்த காலையும்; சினவா யாகுதல் - சினங் கொள்ளாது நீ பொறையே பூண்டொழுகுதல்; இறும்பூது பெரிது - காணும்போதெல்லாம் எனக்குண்டாகும் வியப்பு மிகுகின்றது எ - று. நெடுமிடல் என்பது நெடுமிடல் அஞ்சியின் இயற்பெயர். இவன் அதியமான் நெடுமா னஞ்சியின் குலத்தவன். இவனது நாடு மிக்க வளஞ் சிறந்ததாகும். இப் பாட்டால் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் நெடுமிடலஞ்சியை வென்று அவனது நாட்டை அகப்படுத்திக் கொண்ட வரலாறு குறிக்கப்படுவது காண்க. நீடுர் கிழவனான எவ்வி யென்பவனது ஏவல் கேளாது அவனை யெதிர்த்த பசும்பூட் பொருந்தலர் என்பாரை, இந் நெடுமிட லஞ்சி யென்பான் அரிமணவாயில். உறத்தூரின் கண் வென்றானென ஆசிரியர் பரணர் (அகம். 266) கூறுகின்றார். நெடுமிடல் சாயவென்றும், கொடு மிடல் துமிய வென்றும் பிரித்தோதியதால், கொடு மிடலை அவன் போர் வினைக்கேற்றப்பட்டது. கொடுமிடல் என்புழி மிடல், வலி அதனாற் செய்யப்படுதலின், போர் வினை மிடலாயிற்று. பழைய வுரையும், “மிடல் என்றது வலி” யென்றும், “என்றது வலியாற் செய்யப்படும் போரினை” யென்றும் கூறிற்று. யானை புக்க புலம் அழிவது ஒருதலையாதலின், இச் சேரமான் யானைப் படை கொண்டு சென்று தங்கின வளவிலே புலம் கெட்டமை தோன்ற, “பெருமலை யானையொடு புலங்கெட விறுத்து” என்றார். யானை புக்கவழி, அதன் கை செய்யும் அழிவினும் “கால் பெரிது கெடுக்கும்” (புறம். 184) எனறிக. மிக வுயர்ந்த நாரைகள் என்றற்குத் “தடந்தா ணாரை” யென்றமையின், அவை நெல் நின்ற கழனிக்குள் இனிது சென்று இரை கவரும் என்றற்குப் “படிந்திரை கவரும்” என்றும், நெற்றாளின் உயர்ச்சி தோன்ற, “நெல்லின் கழையமல் கழனி” யென்றும் கூறினார். வளைந்த கதிர்களுடன் விளைந்து நிற்கும் நெல், தன் தாளில் நின்ற நீரிற் படிந்து நாரைகள் இரை கவரச் செய்யும் என்றதனால், கொடுமிடல் துமிப்புண்டு நெடுமிடலஞ்சி சாய்ந்தானாக, அவன்கீழ் உள்ள நாட்டகத்துப் பொருளை நின் படைவீரர் புகுந்து திறையாகப் பெறுகின்றனர் என உள்ளுறுத் துரைப்பது காண்க. முடம், முடந்தை யென வந்தது; பிறரும், “முடந்தை நெல்லின் விளைவயல்” (பதிற். 29) என்பது காண்க. கழை போலும் தாளைக் கழை யென்றார்; பாவை போல் வாளைப் பாவை யென்பது போல, கதிர்களின் பொறையாற்றாது நெல்லினது தாள் வளைதலின், முடந்தையைக் கழைக் கேற்றுவர் பழையவுரைகாரர். |