சிறப்புடையனாதல் பற்றி, “ஒரு பெரு வேந்தே” என்றார். மானமும் வலியுமுடைய வீரர்க்குப் புறக்கொடை மாசு தருவதாகலானும், சேரமான் மாசுடையாரோடு பொரா னாகலானும் பகைவேந்தரை“ஓடாப் பூட்கை” யென்றும், “ஒண்பொறிக் கழற்கால்” என்றும் சிறப்பித் துரைக்கின்றார். போரில் செய்த அரிய செயல்களைத் தம் கழலில் பொறித்துக் கொள்ளுதல் பண்டையோர் மரபாதலின், அம் மரபு மாறா மாண்புடைமை தோன்ற, “ஒண்பொறிக் கழற்கால்” என்றார். ஓடாமையும், கழலணியப்படுதலும் சிறப்புடைச் செயலாக வுடையன வீரர் கால்களாதலால், காலையே விதந்தோதினார். ஓடாப் பூட்கையாலும் ஒண்பொறி பொறித்த கழலாலும் பெருமை யுடையராதலின், உடுக்கும் ஆடையை நிலந்தோய உடுக்கின்றனரென்பார், “இரு நிலந்தோயும் விரிநூ லறுவையர்” என்றார். கொங்குவேளிரும்,“நிலந்தோய் புடுத்த நெடுநுண் ணாடையர், தானை மடக்கா மானமாந்தர்” (பெருங். 1, 36; 64-5) என்று கூறுதல் காண்க. பழையவுரைகாரர், “ஒண்பொறிக் கழற்கா லென்றது, தாங்கள் செய்த அரிய போர்த் தொழில்களைப் பொறித்தலையுடைய ஒள்ளிய கழற்கா லென்றவா” றென்றும் “இச் சிறப்பான் இதற்கு ஒண்பொறிக் கழற்கா லென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். கழல்செய்த கம்மியர் அமைத்த பொறிகள் போலாது போரிடையே புகழ் விளைத்த அரிய செய்திகள் பொறித்த பொறியாதல் பற்றி “ஒண் பொறி” யென்றாரென வறிக. ஒரு பெரு வேந்தே, பூட்கையும் கழற்காலும் விரிநூலறுவையுமுடைய பகைவர் நின்னை யொரூஉப என இயைத்து முடிக்க. பெருவேந் தென்புழிப் பெருமை, பொருளாலும் படையாலுமே யன்றி, அறிவாலும் ஆண்மையாலுமாகிய ஆற்றலின் மிகுதி குறித்து நின்ற தென்க; இனி மான மாந்தராகிய பகைவர் தன்னைக் கண்டு அஞ்சி ஒருவும் பெருமையுடைமை பற்றிச் சேரமானை, பெருவேந் தென்றா ரென்றுமாம். 4 - 12. செவ்வுளைய...............யோம்பன்மாறே. உரை : மாறா மைந்தர் - போர்த்தொழிலில் கூறப்படும் அறத்துறை மாறாத வீரரது; மாறு நிலை தேய - வலியானது கெடுமாறு; முரைசுடைப் பெருஞ் சமம் ததைய - முரசு முழக்கிச் செய்யும் பெரிய போர்க்களத்தே நெருங்கியவழி; ஆர்ப்பு எழ பல்வகைப் படையிடத்தும் ஆரவார முண்டாக; அரைசு படக் கடக்கும் ஆற்றல் - பகை மன்னர் தம் வலி முற்றவும் அழியப் பொருது வென்றி பெறும் ஆற்றலால்; புரை சால் மைந்த - உயர்வமைந்த வலியினை யுடையோனே; செவ் வுளைய மா ஊர்ந்தும் - சிவந்த பிடரியினையுடைய குதிரைமீ திவர்ந்தும்; நெடுங் கொடிய தேர் மிசையும் - நீண்ட கொடியினையுடைய தேர்மீ தேறியும்; ஓடை விளங்கும் உரு கெழு புகர் நுதல் - முகபடாம் அணிந்து விளங்கும் கண்டார்க்கு உட்குப்பயக்கும் புள்ளி பொருந்திய நெற்றியினையுடைய; பொன்னணி யானையின் முரண்சேர் எருத்தினும் - பொன்னரிமாலை யணிந்த யானையினுடைய வலிமை பொருந்திய கழுத்தின்மீதிருந்தும்; மன்நிலத்து - நிலைபெற்ற நிலத்திடத்தும்; அமைந்த. . . . . . பொருந்திப் போருடற்றுதற்கண்; நீ ஓம்பல் மாறு - நீ நின் தானையைப் பாதுகாப்பதனால் எ - று. |