பகைவனாகிய நன்னன் கவர்ந்துகொண்ட நிலப்பகுதியை வென்று கோடல் கருதி அவன் அக்காலத்துச் செய்த சூளுறவின்படி களங்காயாற் கண்ணியும் நாரால் முடியும் புனைந்து கொண்டமையே காரணமாகும் என இவர்கள் கூறிய பெயர்க்காரணம் வரலாற்று நிகழ்ச்சிக்குப் பெரிதும் பொருத்தமுடையதாகும் (பக்கம் 160-2). 43-ஆம் பாடலில் “கல்லோங்கு நெடுவரை யாகிய இமயம் தென்னங் குமரியொடு வடதிசை யெல்லையாக வென மாறிக் கூட்டுக” எனவரும் பழையவுரைப்பகுதி ஏடெழுதுவோரது கருத்தின்மையால் பிழைபடப் பிறழ்ந்துளது. அப்பகுதி, “கல்லோங்கு நெடுவரையாகிய வடதிசை இமயம் தென்னங்குமரியொடு எல்லையாக என மாறிக் கூட்டுக” என்றிருத்தல் வேண்டும். இமயமும் தென்னங்குமரியும் வடதிசைக் கெல்லையாதல் ஒருவாற்றானும் பொருந்தா தென்பதும் இமயம் வடதிசையெல்லையாகவும் குமரி தென்னெல்லை யாகவுங் கொள்ளுதலே பொருத்தமுடைத் தென்பதும் கருதிய இவ்விரிவுரை யாசிரியர் அக்கருத்திற்கேற்பத் தம் பதியவுரையை அமைத்துக்கொண்டமை இவண் குறிப்பிடத் தகுவதாம். இப்பாட்டில் ‘கண்டி நுண்கோல்’ என்பது ‘கண்டிர னுண்கோல்’ என்றிருத்தல் வேண்டும். ‘கண்திரள் வேய்’ (பெருங் கதை 1-46-168) எனவருந்தொடர் இப்பாடத்தின் இயல்பினைப் புலப்படுத்துவதாகும். இப்பாட்டில் வந்த ஏறாஏணியாகிய கோக்காலியி்ன் இயல்பினை இவ்விரிவுரை நன்கு புலப்படுத்துகின்றது. இவ்விரிவுரையாசிரியராகிய திரு பிள்ளையவர்கள் பழையவுரையாசிரியர் உரையுடன் தம் கருத்திற்பட்ட புதியவுரையினையும் ஒப்புநோக்கத் தருவது, நூல் நயங்காணும் இவர்தம் ஒட்பத்தினை இனிது விளக்குவதாம் (பக். 199-200). 45-ஆம் பாடலில் ‘கடல்மறுத்திசினோர்’ என்பதனை விளக்கவந்த பழைய உரையாசிரியர் “கடல் மறுத்தல் என்றது, கடலிற்புக்கு ஒருவினை செய்தற்கு அரி தென்பதனை மறுத்தலை” எனத் தம் மதி நுட்பத்தாற் சிறப்புடைய பொருள் கூறினார். இப் பொருள் ‘அரியவென் றாகாத இல்லை’ (குறள். 537) எனவருந் திருவள்ளுவனார் வாய்மொழியை நினைவிற்கொண்டு எழுதப்பெற்றதாகும். ‘கடல் மறுத்திசினோர்’ என்பதற்குக் ’கடலிற் புக்கு ஒரு தொழிலைச் செய்தற்கு மறுத்தோராகிய மன்னர்’ எனப்பொருள் கூறினாரும் உளர். கடலிற் புக்கு ஒரு தொழிலைச் செய்தற்கு மறுத்தோராகிய மன்னர் நின்னைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள் எனச் செங்குட்டுவனைப் பழிக்கும் நிலையில் பாணர் என்னும் புலவர்பெருமான் அவ்வேந்தனைப் பாடியிருக்க மாட்டார் |