துறை : வாகைத்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம் : அது. தூக்கு : செந்தூக்கு. பெயர் : மெய்யாடு பறந்தலை. 3 - 6. இருங்களிற் றியானை...............பறந்தலை. உரை : இருங்களிற்றுயானை இலங்கு வால் மருப்பொடு பெரிய களிற்றியானைகளின் விளங்குகின்ற மருப்புக்களுடன்; நெடுந்தேர்த் திகிரிதாய - நெடிய தேர்களின் சக்கரங்கள் சிதறிப் பரந்து கிடக்கும்; வியன் களத்து - அகன்ற போர்க்களத்தில்; அளகுடைச் சேவல் கிளை - பெடையையுடைய சேவற்பருந்தினினம்; புகா ஆர - தசையாகிய இரையையுண்ண; தலை துமிந்தெஞ்சிய மெய்யாடு பறந்தலை - தலை துணிக்கப்படவே எஞ்சிய கவந்தம் எழுந்தாடும் போர்க்களத்துப் பறந்தலை எ - று. யானையுந் தேரும் பட்டுக் கிடத்தலின், அவற்றின் மருப்பும் திகிரியும் போர்க்களத்திற் சிதறிக் கிடக்குமாறு தோன்ற, “மருப்பொடு திகிரி தாயவியன்களத்” தென்றார். மருப்பையும் திகிரியையும் களத்தையும் தனித்தனியே சிறப்பித் தோதியது போரினது பெருமையும் கடுமையுந் தோற்றுதற்கு. ஆங்கே பட்ட குதிரை, யானை, வீரர்களின் உடல் துணிகள் பருந்தினத்துக்கு இரையாகின்றன வென்பதாம். துமிந்து, வினையெச்சத் திரிபு; “உரற்கால் யானை யொடித்துண் டெஞ்சிய யா” என்புழிப் போல. பழையவுரைகாரர், “வியன்கள மென்றது ஒன்றான போர்க்களப் பரப்பை” யென்றும், “அளகுடைச் சேவலென்றது, பெடையொடு கூடின பருந்தின் சேவலை” யென்றும், “பறந்தலை யென்றது, அப்பெரும் பரப்பின் உட்களத்தை” யென்றும் கூறுவர். மேலும், “குறையுட லெழுந்தாடுவது ஒரு பெயருடையார் பலர் பட்டவழி யன்றே; அவ்வாற்றாற் பலர் பட்டமை தோன்றக் கூறிய சிறப்பான் இதற்கு மெய்யாடு பறந்தலை என்று பெயராயிற்று” என்று அவர் கூறுவர். 7 - 10. அந்திமாலை.................நின்வயினானே. உரை : அந்தி மாலை விசும்பு கண் டன்ன - அந்திமாலைக் காலத்தில் வானத்தைக் கண்டாற் போன்ற; செஞ் சுடர் கொண்ட குருதி மன்றத்து - சிவந்த ஒளியையுடைய குருதி படிந்த போர்க்களத்து |