பக்கம் எண் :

201

நடுவிடத்தே;   பேஎய் ஆடும் வெல் போர் வீயா  யாணர் - பேய்கள்
எழுந்தாடுகின்ற வெல்லும் போரிடத்துக் கெடாத  புதுமையினையுடைய;
நின் வயினான் - நின்னிடத்தில் எ - று.
  

குருதி  படிந்த மன்றம், அந்தி மாலைப்போதிற் றோன்றும் செக்கர்
வானம்  போல்கின்ற  தென்பார், “அந்தி  மாலை விசும்புகண் டன்ன”
வென்றார்;  இடையறாது  பெருகும்  குருதியின்  நிறம்   ஒள்ளிதாய்த்
தோன்றலின்,  “செஞ்சுடர்  கொண்ட  குருதி”  என்றார்.  “பருதிசெல்
வானம்  பரந்துருகி யன்ன, குருதியா றாவது கொல்” (பு. வெ. மா. 70)
எனப்  பிறரும்  கூறுதல்  காண்க.  மன்று, போர்க்களத்தின் நடுவிடம்
பழையவுரைகாரர்,  “மன்றென்றது  உட்களத்தின் நடுவை; அது மன்று
போறலின்  மன்றெனப்பட்ட” தென்றும் கூறுவர். போரில் வெற்றியெய்
துந்தோறும் புதிய புதிய செல்வம் இடையறாது வருதலால் “வெல்போர்
வீயா  யாணர்”  என்றார். பழையவுரைகாரர், போரையே செல்வமாகக்
கொண்டு,  “வெல்போராகிய இடையறாது வருகின்ற செல்வம்” என்பர்.
செல்வத்துக்குப்   போர்   வருவாயாதலின்,   “செல்வத்தைப்  போர்
என்றார். நின் வயினான; ஆனும் அகரமும் அசை.
  

1 - 2. புரைசால்...............நின்வென்றி.  

உரை :  புரைசால் மைந்த - உயர்ச்சியமைந்த வேந்தே; நீ ஓம்பல்
மாறு   -  படையழிவு  உண்டாகாவாறு  நீ  நின் தானையை  நன்கு
பாதுகாத்தலால்;  நின் வென்றி பெருமை - உன்னுடைய வென்றிகளும்
பொருளும்   படையும்;   உரை   சான்றன   -  சான்றோர்  புகழும்
புகழமைந்தன எ - று.
  

பிறரைத்     தனக்கு    மெய்ம்மறையாகக்   கொள்ளாது,    பிற
சான்றோர்க்குத்  தான் மெய்ம்மறையாய் நின்று வென்றியெய்தித்  தன்
பெருமைகளை  நிலைநாட்டுகின்றா  னென்பது  தோன்ற, “நின் வயின்
நின்  வென்றி  பெருமை  உரை  சான்றன”  என்றார். “நின் வென்றி
பெருமைகள்” என்றவர் மேலும் ‘நின் வயினான” என  வற்புறுத்தலின்,
உரைசான்ற  வென்றியும் பெருமைகளும் பிறரிடத்தின்றி  நின்னிடத்தே
யுளவாயின என்றாராயிற்று. பெருமை நின் வென்றி யென்பதனை,  நின்
வென்றி  பெருமையென  இயைத்து  உம்மைத் தொகையாகக் கொள்க.
பெருமை,  பொருளும்  படையும்  என்ற இரண்டன்பெருமை  மேற்று.
இனிப்  பழையவுரைகாரர்,  நின்  வென்றி  பெருமையென  வியைத்து,
“நின் வென்றிகளின் பெருமை” என்பர்.
  

இதுகாறும்     கூறியது,  மருப்பொடு திகிரி தாய வியன் களத்துப்
பறந்தலையது   மன்றத்தின்கண்  பேஎய்  ஆடும்  வெல்போர்  வீயா
யாணர்  நின்  வயின்,  புரைசால்  மைந்த,  நீ  யோம்பல் மாறு, நின்
வென்றி பெருமை உரைசான்றன என்பதாம். இனிப்  பழையவுரைகாரர்,
“மைந்த, நின் படையழிவு படாமை நீ யோம்புவினை செய்தமையானே
நின்  வென்றிகளின்  பெருமை பிறரிடத்தின்றி நின்னிடத்தே புகழ்ச்சி
யமைந்தன என வினைமுடிவு செய்க” என்பர்.