“பனைதடி புனத்தின் கைதடிபு பலவுடன் யானை பட்ட கடுந்தார்” என்றார். தார், வாளேந்தி முற்படச் சென்று பொரும் தூசிப்படை. தார், ஈண்டு ஆகுபெயராய், அத் தார் நின்று பொரும் களத்தைக் குறித்தது. ஏனைப் படை வகை போலாது, வாட்படை இருதிறத்தினும் இனிது நுழைந்து தம்முட் கலந்து போருடற்றற்கு வாய்ப்புடையதாகலின், அச் சிறப்புத் தோன்ற, “வாள் மயங்கு கடுந்தார்” என்றார். பின்னர் அணிபெற்று வரும் வேற்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை முதலிய பல் படையும் சேரப் பொருது பிறப்பிக்கும் குருதிச் செம்புனலை வாளேந்திச் செல்லும் தார்ப்படையே பிறப்பிக்கும் பீடுடைய தென்பது தோன்ற நிற்கும் சிறப்புப்பற்றி, இப்பாட்டு “வாண்மயங்கு கடுந்தார்” எனப் பெயர் பெறுவதாயிற்று. இனிப் பழையவுரைகாரர், “வாள் மயங்குதலாவது இரண்டு படையில் வாளும் தம்மிற் றெரியாமல் மயங்குதல்; இச் சிறப்பான் இதற்கு வாண்மயங்கு கடுந்தார் என்று பெயராயிற்று” என்பர். எருவை பொறித்தது போன்ற கழுத்தினையுடைய தென்பதைப் பிறரும், “பொறித்த போலும் வானிற வெருத்தின், அணிந்த போலு மஞ்செவி யெருவை” (அகம். 193) என்பர். எருவைச்சேவல் தன் பெடையொடு கூடிப் பிணமுண்பது குறித்து, “எருவைப் பெடைபுணர் சேவல்” என்றார். எழால், இராசாளி யென்னுங் கழுகு. திணைமொழியின் பழையவுரைகாரர், புல்லூறு என்பர். இதன் ஆணுக்குக் கொண்டை யுண்டென்றற்கு, “குடுமி யெழால்” என்றார்; இவ்வியைபே பற்றி ஆசிரியர் தொல்காப்பியரும், “மயிலு மெழாலுமே பயிலத்தோன்றும்” (மரபு. 44) என்றமை காண்க. பிணத்தின்மேலிருந்துண்ணும் எருவையும் எழாலும், அப் பிணஞ்செல்வுழித் தாமும் உடன்சேறலின், “கொண்டு கிழக் கிழிய” என்றார். கிழக்கு, கீழிடம்; “கிளைஇய குரலே கிழக்குவீழ்ந் தனவே” (குறுந். 337) என்றாற் போல. நீர்வீழ்ச்சிக்குரிய நிவப்பினை, “நிலனிழி நிவப்பு” என்றார்; நீர்வீழ்ச்சிக்கண் பெருமரங்கள் புரண்டு வீழ்ந் தோடல்போலக் குருதிச் செம்புனலொழுக்கின்கண் மாவும் மக்களும் பட்ட பிணம் புரண்டு வீழ்ந்தோடுகின்றன வென்பார், “நிலமிழி நிவப்பின் நீணிரை பல சுமந்து குருதிச் செம்புன லொழுக” என்றார். உருகெழு கூளி, கண்டார்க்கு அச்சம் பயக்கும் பேய்க்கூட்டம். இதனாற் சொல்லியது, இவ்வண்ணம் கடுந்தார் நின்று பொருத போர்க்களத்தின்கண் பிணம் உணீஇயர் சேவல் எழாலொடு கிழக் கிழிய, குருதிச் செம்புனல் நீணிரை பலசுமந்து, கூளிகள் மகிழ்ந்தாட, ஒழுகச் செருப்பல செய்குவை; நின் பெருவளம் வாழ்க என்பதாம். இவ்வாறு சேரனது போர்க்களத்தைச் சிறப்பித்துப் பாடுதலின், இப்பாட்டுக் களவழி யென்னும் துறை யமைந்த பாட்டாயிற்று. இனி, பழையவுரைகாரர், “உள்ளமொடு வம்பமர்க் கடந்து செரும்பல செய்குவை; அதனானே நினது வலி நின்னிடத்துக் கேடு படாததாயிருந்தது; அதன்மேலும் இதற் கடியாகிய நின் போர் வளம் வாழ்க எனக் கூட்டி வினைமுடிவு செய்க” என்பர். “இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்” றென்றும், “மிகுதி வகையால் தன் போர்க்களச் சிறப்புக் கூறினமையின், துறை களவழி யாயிற்” றென்றும் பழையவுரை கூறுகிறது. |