அருளு முகத்தால் முறையே இயலும் இசையும் நாடகமுமாகிய முத்தமிழும் வளர்த்துப் புகழ் நடுதற்கு ஆக்கமாதலின “வாழ்க நின் வளனே” என்றும், புகழாகிய வூதியம் நிறைந்த வாழ்க்கையாதலின், “வாழ்க நின்னுடைய வாழ்க்கை” யென்றும் கூறினார். பகைவர்க்குப் பழங்கண் ஆர அருளியென வியைப்பினுமாம். வேந்தன் எக் காலத்தும் பிறர்க்கு அருளுதலையே செய்கையாக வுடைய னாதலாலும், அவ்வருள் நட்டார்க்கு ஆக்கமாகவும், பகைவர்க்குத் துன்பமாகவும் பயன் செய்தல் பற்றி, பகைவர்க்குப் பழங்கண் “அருளி” யென்றார். பழங்கண், துன்பம் பகைவர்க்குப் பழங்கண் செய்தவழி, அவர் தெருண்டு திறை தந்து வேந்தரது அருளைப் பெறுபவாதலின், பழங்கண் அருளி யென்றாரென்றுமாம். பகைப்புலத்துப் பெற்ற நன்கலங்களைத் தான் விரும்பாது புலவர் முதலிய நகைப்புல வாணர்க்கு வரையாது வழங்குதலின், “நகைவ ரார நன்கலஞ் சிதறி” என்றார் “அருளி” யென்றதனால் சேரனது தகுதியும், “சிதறி” யென்றதனால் அவனது கொடையும் குறிக்கப்பெற்றன. பிறரும், “பகைப்புல மன்னர் பணி திறை தந்துநின், நகைப்புல வாணர் நல்குர வகற்றி, மிகப் பொலியர் தன் சேவடி” (புறம். 387) என்பது காண்க. சேரனுடைய சால்பும் செம்மையும் எடுத்தோதும் கருத்தினராதலின், “ஆன்றவிந் தடங்கிய” வென்றதனால் சால்பும், “செயிர்தீர் செம்மால்” என்றதனால் செம்மையும் விளக்கினார். 6 - 11. வான்றோய்..............கொள்கையும். உரை : வான் தோய் நல்லிசை - வான் புகழ வுயர்ந்த நல்ல புகழானது; உலகமொடு உயிர்ப்ப - உலக முள்ளளவும் தான் உளதாமாறு நிலைபெற; துளங்கு குடி திருத்திய வலம்படு வென்றியும் - வீழ்ந்த குடியினரை உயரப்பண்ணிய வெற்றி பெறுதற்குக் காரணமான செய்கையும்; மா இரும் புடையல் - கரிய பெரிய பனந்தோட்டாலாகிய மாலையும்; மாக்கழல் பெரிய வீரக்கழலும்; புனைந்து - அணிந்து சென்று; மன் எயில் எறிந்து - பகை வேந்தருடைய மதில்களை யழித்து; மறவர்த் தரீஇ - அவருடைய சீரிய வீரர்களைக் கைப்பற்றிக் கொணர்ந்து; தொன்னிலை சிறப்பின் நின் நிழல் வாழ்நர்க்கு - பழைமையான நிலைபெற்ற சிறப்பினையுடைய நின் ஆதரவின் கீழ் வாழும் நன்மக்கட் கொப்ப; கோடு அற வைத்த கோடாக் கொள்கையும் - அவர் மனத் திருந்த கொடுமை யறவே யில்லையாமாறு செம்மையுறத் திருத்தி வைத்த அறக் கோட்பாட்டையும் எ -று. நிலவுலகை யாதாரமாகக் கொண்டு ஒன்றா வுயர்ந்த புகழைக் கண்டு வானோரும் பரவுதலின், “வான்றோய் நல்லிசை” யென்றார்; இனி, “வானுயர் தோற்றம்” என்றாற் போல இலக்கணையாகக் கொள்ளினுமமையும். அறநெறியாற் பெற்ற புகழென்றற்கு, “நல்லிசை” யெனப்பட்டது. உயிர்த்தல், உளதாதல். ஆதாரமாகிய உலகம் பொன்றுங்காறும் புகழ் பொன்றுதலில்லை யாதலால், “உலகமொ டுயிர்ப்ப” என்றார். வென்றி விரும்பும் வேந்தர்க்கு வலிமிக்க படையும் செல்வ மிக்க குடிகளும் ஆதாரமாதலின், அவன் தன் நாட்டில் துளங்கு குடிகளைச் செம்மை நெறிக்கண் திருத்தமுற |