வைத்தல் வலம்படு வென்றியாம் என்பார், “துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றி” யென்றார்; வென்றி தரும் செயல் வென்றி யெனப்பட்டது. அரசியல் முறைகள் பலவற்றுள் ஒன்றாகிய துளங்குகுடி திருத்தும் செய்கையின் சிறப்பை எடுத்தோதி, அஃது அரசற்கு நிலைத்த வெற்றியைப் பயக்கும் எனப் பயன்மேல் வைத்து “வலம்படு வென்றி” என்றதனால், இப் பாட்டு இப் பெயரினை யுடைத்தாயிற்று. இனி, பழையவுரைகாரர், “வலம்படு வென்றியென்றது மேன்மேலும் பல போர் வென்றிபடுதற்கு அடியாகிய வென்றி யென்றவா” றென்று கூறி, இச் சிறப்பான் இதற்கு ‘வலம்பட வென்றி’ என்று பெயராயிற்று” என்பர். சேரமன்னர்க்குரிய அடையாள மாலையாதலின், “மாயிரும் புடையல்” எனச் சிறப்பித்தோதினார் மன்னெயில் என்புழி, மன்னென்றதற்கு நிலைபெற்ற வென் றுரைப்பினுமாம். அழியா வலியுடைத்தென வெண்ணிச் செருக்கியிருந்த பகை மன்னர் மதிலை எறிந்தானாதலின், அவர் செருக்கினை யிகழ்ந்து “மன்னெயில்” என்றா ரென்றுமாம். பகைமன்னர் வழிநின்று தமது அறந்திரியா மறத்தை நிலைநாட்டி மேம்பட்டா ராதலின், அவரைச் செகுத்தல் அறமாகாமை யுணர்ந்து அவரைப் பற்றிக் கொணர்ந்து, அவரது உள்ளத்தே தன்பால் பகைமையின்றி, நட்பும் துணைமையும் பிறக்குமாறு அறம் புரிந்தாக்கிய திறத்தை,“கோடற வைத்த கோடாக் கொள்கை” யென்றார். நின் நிழல் வாழ்வார்க் கொப்ப வென ஒருசொல் வருவிக்க இது “பிழைத்தோர்த் தாங்கும் காவல்” (தொல். புறத். 21) என்ற வாகைத் துறைக்கண் அடங்கும். “தொன்னிலைச் சிறப்பின் நின்னிலை வாழ்நர்க் கொப்ப” வைத்தனை யென்றதனால், அறந் திரியா மறவரது வரிசையறிந்து பேணலும் வற்புறுத்தினா ராயிற்று. கோடுதல் கொடுமை யாதலின், கொடுமைக்குரிய பகைமையை நீக்குதலைக் “கோடற வைத்தல்” என்றார். அறங்கண்ட வழி அதனை யோம்பிப் பாதுகாத்தல் செங்கோன்மை யாதலின், அறத்திற் றிரியா மறவரைப் பேணிய கோட்பாட்டை, “கோடாக் கொள்கை” யென்பா ராயினர். கோடற வைத்த கோடாக் கொள்கை யென்பதற்குப் பழையவுரைகாரர், “கொடுமை யறும்படி வைத்த பிறழாக் கொள்கை” யென்பர். எனவே, பகைமன்னர்க்குரிய மறவரைக் கொணர்ந்து, நின் னிழல் வாழும் சான்றோராகிய மறவர்க்குக் கொடுமை செய்தற் கேதுவாகிய பகைமை அவர் நெஞ்சில் நிகழாத வண்ணம் போக்கினை யென்றும், அதனால் கொள்கை பிறழாயாயினை யென்றும் கூறினாருமாம். 12 - 13. நன்று.................உலகத்தோர்க்கே. உரை : வெந் திறல் வேந்தே - வெவ்விய திறல் படைத்த அரசே; நீ நன்று பெரிது உடையையால் - நீ மிகப் பெரிதும் உடையனாயிருக்கின்றாயாதலால்; இவ்வுலகத்தோர்க்கு - இவ்வுலகத்தில் வாழ்வோரது ஆக்கத்தின் பொருட்டு (நின்னுடைய வாழ்க்கையும் நின் வளனும் வாழ்க) எ - று. வலம்படு வென்றியும், கோடாக் கொள்கையும் பலரும் கண்டு பாராட்டுமாறு விளங்க நிற்றலின், இவற்றிற் கேதுவாகிய அவனது திறலை வியந்து, “வெந்திறல் வேந்தே” என்றும், தான் செய்யும் மறச் செயல் பலவற்றுள்ளும் இவ் விரு கொள்கைகளும் மிகுதியும் சிறப்புற்று நிற்றலின், |