இதுவு மது. பெயர் : பரிசிலர் வெறுக்கை. 3 - 4. வளம்.................சேரல். உரை : வளம் தலை மயங்கிய பைதிரம் - பல்வகைப்பட்ட வளங்களும் தம்மிற் கலந்துள்ள நாட்டை; திருத்திய - அதன் வளம் பலவும் செம்மையுற வருதற்கேற்பத் திருத்திச் செம்மை செய்த; களங்காய்க் கண்ணி - களங்காயாற் றொடுக்கப்பட்ட கண்ணியினையும்; நார் முடி - நாராற் செய்யப்பட்ட முடியினையுமுடைய; சேரல் - சேரமானே எ - று. ஒருவகையான செம்மை நெறியின்றி நாட்டிற் படும் செல்வமெல்லாம் தம்முள் தடுமாறி மயங்கி யிருந்தமையின், “வளந்தலை மயங்கிய பைதிரம்” என்றும், அவற்றைத் திருத்தி யொழுங்கு செய்து வருவாயைச் செம்மைப்படுத்தினமையின், “திருத்திய” என்றும் கூறினார். “காடு கொன்று நாடாக்கிக், குளந்தொட்டு வளம்” பெருக்குதலும், “கூலம் பகர்நர் குடிபுறந் தராஅக், குடிபுறந் தருநர் பார மோம்பி” நோயும் பசியு மில்லையாகச் செய்தலும் பிறவும் பைதிரம் திருத்தும் பண்புடைச் செய்கைகளா மென வறிக. சேரவேந்தர் இமயத்தை வரம்பாகக் கொண்டதும், பகையரசர் எழுவர் முடிப் பொன்னை ஆரமாகச் செய்து மார்பி லணிந்து கொண்டதும் போல, இச் சேரமான் களங்காயாற் கண்ணியும் நாரால் முடியும் செய் தணிந்துகொண்டது பற்றி, “களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்” எனப்பட்டான். இனிப் பழையவுரைகாரர், “தான் முடிசூடுகின்ற காலத்து ஒரு காரணத்தால் முடித்தற்குத் தக்க கண்ணியும் முடியும் உதவாமையின் களங்காயாற் கண்ணியும் நாரால் முடியும் செய்துகொள்ளப்பட்டன வென்றவா” றென்பர். இவன் இளையனாய் முடிசூடிக்கொண்ட காலத்தே தாமே சேர வரசுக் குரியோ ரெனச் சிலர் நன்னன் என்பான் துணையால் சேரவேந்தரா யிருந்தனர்; அவர்க்குத் துணையாம் வகையால் சேரநாட்டின் ஒருபகுதி நன்னன் வசமிருந்தது; அதனால் அக்காலத்துச் செய்துகொண்ட சூளுறவுக் கேற்பக் களங்காய்க் கண்ணியும் நார்முடியும் கொண்டான் என்று கோடல் நேரிதாம். வாகைப் பெருந்துறை யென்னுமிடத்து இவன் அந்த நன்னனை வென்று தான் பண்டிழந்திருந்த நாட்டை வென்று கொண்ட செய்தியை, ஆசிரியர் கல்லாடனார், “குடாஅது இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவிற், பொலம்பூ ணன்னன் பொருதுகளத் தொழிய, வலம்படு கொற்றந் தந்த வாய்வாட், களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல், இழந்த நாடு தந்தன்ன, வளம்” (அகம். 199) என்று கூறுவர். இப் பத்துக்குரிய |