என்பதனை இப்பாடலைப் படிப்போர் நன்குணர்வர். ‘கடல் மறுத்திசினோர்’ என்பதற்குக் ‘கடலிடத்தே எதிர்ந்த பகைவரை எதிர்த்துப் பொருதழித்த வேந்தர்’என யாவரும் எளிதின் உணரும்படி இவ்வாசிரியர் கூறிய உரை வேறுபாடு ஏற்றுக்கொள்ளத் தகுவதேயாகும். இவ்வாறே “கரைவாய்ப்பருதி” (பக். 214-5) ‘வடுவடு நுண்ணயிர்’ (பக். 237) என்பவற்றுக்குக் கூறிய விளக்கங்கள் அறிந்துகொள்ளுதற் குரியனவாம். இவ்விரிவுரை பாடற்பொருளை விளக்குவதுடன் அதன் பழையவுரைக்குறிப்பினை விளக்குதற்குரிய சிறந்ததோர் விளக்கவுரையாகவுந் திகழ்கின்றது என்பதனை முன்பே கூறினேன். ஒவ்வொரு பாட்டின் உரைப்பகுதியிலும் பழைய வுரையாசிரியர் கூறிய வுரைக்குறிப்புக்களை எடுத்துக்காட்டி விளக்கிச் சொல்லும் முறை இவ்வுண்மையினை வலியுறுத்துவதாம். சங்கத் தொகை நூல்களுக்கு விரிவுரை யெழுதுவோர் பதிப்புக்களிற் காணப்படும் பிழைகளை யுணர்ந்து அந்நூல்களின் உண்மையான பாடத்தைத் தெரிந்துகொள்ளுங் கடமையுடையராவர். இக்கடமையினை நன்குணர்ந்த இவ்விரிவுரையாசிரியர் பதிற்றுப்பத்தின் ஏட்டுச் சுவடிகளையும் அச்சிடப்பெற்ற சுவடியையும் ஒப்புநோக்கிச் சில பாட வேறுபாடுகளைத் தெரிந்து கொண்டார்கள். 55-ஆம் பாடலில் “பெய்து புறந்தந்து பொங்க லாடி, விண்டுச் சேர்ந்த வெண்மழை போலச், சென்றாலியரோ பெரும” என்ற தொடர் அமைந்துளது. இத்தொடர்க்கு “பெருமையை யுடையாய், மழையைப்பெய்து உலகத்தைக் காப்பாற்றிப் பின்பு பன்னின பஞ்சைப் போலப் பொங்கியெழுதலைச் செய்து மலையைச்சேர்ந்த வெளுத்த மேகத்தைப்போலச் செல்லாதொழியாதாக” என இக்காலத்தில் எழுதப்பெற்ற குறிப்புரை காணப்படுகின்றது. இக்குறிப்புரையில் உள்ளவாறு “நின் வாழ்நாள் வெளுத்த மேகத்தைப்போலச் செல்லாதொழியாதாக” என இருமுறை எதிர்மறுத்துரைத்தால் “நின் வாழ்நாள் வெண்மழைபோலச் சென்று ஒழிக” என்னும் வைதற்பொருள் தோன்றுவதன்றி வாழ்த்துதற் பொருள் தோன்றுமாறில்லை. இப்பகுதிக்குப் பொருள் கூறவந்த பழையவுரையாசிரியர் “வெண்மழை போலச் சென்றா லியர் என்றது, அம்மழை பெய்து புறந் தருங் கூற்றையொத்து, அது பெய்து வெண்மழையாகக் கழியுங் கூற்றை ஒவ்வாது ஒழிக என்றவாறு” என விளக்கந் தருகின்றார். எனவே, மழையின் இயல்பாகிய புரத்தல் தொழிலும் அம்மழை பெய்தபின் வெண்மேகமாகிக் கழிதல் தொழிலும் ஆகிய இரண்டினுள், மழை இவ்வுலக வுயிர்களைப் புறந்தருதல் |