ஆசிரியரான காப்பியாற்றுக் காப்பியனாரும், இச் சேரமான் நன்னனை வென்றதை, “பொன்னங் கண்ணிப் பொலந்தேர் நன்னன், சுடர்வீ வாகைக் கடிமுதல் தடிந்த, தார்மிகு மைந்தின் நார்முடிச் சேரல்” (பதிற். 40) என்று பாராட்டுகின்றார். நன்னனது கடிமரம் தடிந்து களங்காய்க் கண்ணியையும் அவனைக் கொன்று, தான் இழந்த நாட்டைப் பெற்ற பின்பு நார்முடியையும் மாற்றிக் கொண்டான். மாற்றிக் கொண்ட பின்னரும், அவன் வென்றி மாண்பு குறித்துப் பண்டைப் பெயராலே வழங்கப்படுவா னாயினானென வறிக. இந்த நன்னன் வசமிருந்த சேரநாட்டுப் பகுதி இப்போதுள்ள பொள்ளாச்சித் தாலுகா வாகும். இதன்கண் ஆனைமலை யென்னும் ஊர் பண்டை நாளில் நன்னனூர் என்ற பெயர் கொண்டிருந்த தென ஆனைமலைக் கல் வெட்டுக் (A. R. No. 214 of 1927 - 28; வீர கேரள வளநாட்டு நன்னனூர்) கூறுகின்றது. இவனொடு களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் போருடற்றி வென்றி யெய்திய வாகைப் பெருந்துறை, இப்போது ஈரோட்டுக் கருகிலுள்ள பெருந்துறை யாகலாம். 5 - 8. எயில்முகம்..............வேந்தே. உரை : எயில்முகம் சிதைய - பகைவருடைய மதிலிடங்கள் சிதைந்தழியுமாறு; தோட்டி ஏவலின் - நின்னால் ஏவப்படுதலை யுடைமையால்; தோட்டி தந்த - நாடு காவலை நினக்கே தந்த; தொடி மருப்பு யானை - தொடியணிந்த மருப்பினையுடைய யானைப் படையும்; செவ்வுளைக் கலிமா - சிவந்த பிடரியினையுடைய குதிரைப் படையும்; ஈகை வான் கழல் - பொன்னாற் செய்த உயர்ந்த கழலையும்; செயல் அமைகண்ணி - வேலைப்பாடமையத் தொடுத்த கண்ணியையு மணிந்த; சேரலர் - சேரநாட்டுக் காலாட் படையு முடைய; வேந்தே - சேரமானே எ - று. தோட்டி, முன்னது ஆகுபெயரால் தோட்டி கொண்டு யானை மேலிருந்து அதனைச் செலுத்துவோற் காயிற்று; பின்னது, யானையை நெறியறிந்து செலுத்திக் காத்தற்குக் கருவியாதலின் காவற்பொருட்டாயிற்று. தோட்டி யுடையானைத் தோட்டி யென்ப தாகுபெயரென்பர் தெய்வச்சிலையார் (தொல். சொல். வேற். மயங். 33); “நீயுடன்றோர் மன்னெயில் தோட்டி வையா” (பதிற். 25) என்புழித் தோட்டி யென்பதற்குக் காவல் என்றே பழையவுரைகாரரும் பொருள் கூறினர். தோட்டி யென்றது பொதுப்பட யானைமேல் வீரர்க்காயினும், இச் சேரமான், அவ் வியானைப் படைக்குத் தலைவனாய் நின்று (தலைமைத் தோட்டி யாய் நின்று) பகைவர் எயில் முகம் சிதைய ஏவுதலின், “தோட்டி யேவலின்” என்றார். அச் செயலால் யானைப்படை பகைவர் மதில்களை யெறிந்து வேந்தன் கருதிய வென்றியைப் பயந்து நாடு காவலை நிலை நாட்டுதலால், “தோட்டி தந்த தொடிமருப்பியானை” யென்றார். பகைவர் எயில் முகம் எளிதிற் சிதையுமாறு தோட்டியால் நெறியறிந்து செலுத்தும் திறம் கண்டு அவ் யானை தாமே நீ மேற்கொண்டு எம்மைச் செலுத்துக” எனத் தோட்டியைத் தந்தன வென்றும், அதனால் “தோட்டி தந்த தொடிமருப் பியானை” யென்றா ரென்றுமாம். உளை, தலையாட்டமுமாம். ஈகை, பொன், யானையும், கலிமாவும |