சேரலருமுடைய வேந்தே என இயைக்க. கழலும் கண்ணியுமுடைய சேரலர் என்க. சேரநாட்டுக் காலாட்படை வீரரை, சேரலர் என்றார். 9 - 12. பரிசிலர்............வரம்ப. உரை : பரிசிலர் வெறுக்கை - பரிசில் மாக்கள் இனிது வாழ்தற்கு வேண்டும் செல்வமாயிருப்பவனே; பாணர் நாள் அவைபாணர்கள் இருக்கும் நாளோலக்கத்தையுடையாய்; வாள் நுதல் கணவ - ஒளிபொருந்திய நுதலையுடையாட்குக் கணவனே; மள்ளர் ஏறு - போர்வீரர்க்கு ஆண்சிங்கம் போல்பவனே; மையற விளங்கிய - குற்ற மின்றாக விளங்குகின்ற; வடு வாழ் மார்பின் படைப்புண்ணா லுண்டாகிய வடுப் பொருந்திய மார்பினையுடைய; வசையில் செல்வ - குற்றமில்லாத செல்வத்தையுடையவனே; வான வரம்ப - வானவரம்ப னென்னும் பெயருடையாய் எ - று. பரிசிலர், பரிசில் பெற்ற வாழும் புலவர், பாணர், கூத்தர், பொருநர் முதலாயினோர். இவர்கள் பாடுதற்குரிய பண்புடைய செல்வர்களைப் பாடி அவர் வரிசை யறிந்து நல்கும் பரிசில் பெற்று வாழ்பவர். “பரிசிலர் வெறுக்கை பாணர் நாளவை” யென்று பாணரைப் பிரித்துக் கூறியது போலவே, “பாணர் புரவல பரிசிலர் வெறுக்கை” (பதிற். 65) எனப் பிறரும் கூறுதலின், ஏனைப் புலவர் கூத்தர் முதலாயினாரைப் போலப் பாணர் பரிசிலராகும் வகையில் அத்துணைச் சிறப்பிலர் என்பது பெறப்படும். வெறுக்கை, செல்வம். செல்வம் தருபவனைச் செல்வம் என்றார். இவ்வாறே முருகவேளையும் நக்கீரர், “அந்தணர் வெறுக்கை” (முருகு. 263) என்பர். இனிப் பழையவுரைகாரர்,“பரிசிலர் வெறுக்கை யென்றது, பரிசிலர் வாழ்வென்றவா” றென்றும், “இச் சிறப்பான் இதற்குப் பரிசிலர் வெறுக்கை யென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். செல்வப்பொருள் இல்லார்க்கு இவ்வுலகத்து வாழ்வு இல்லை யென்ப வாகலின், அவ் வியைபுபற்றி வெறுக்கையை வாழ் வென்ற தொக்கு மாயினும், பாட்டிற்குப் பெயராகும் வகையில் இஃது ஏதுவாதல் சிறவாமை யறிக. “வயவர் வேந்தே பரிசிலர் வெறுக்கை” (பதிற். 15) எனப் பிறரும் வழங்குதலின், இது பயின்ற வழக்குடைத்தாதல் பெறப்படும். ஏனைப் பாட்டுக்களிற் போலாது, ஈண்டு, இதனைத் தொடர்ந்து நிற்கும் சிறப்புரைகளுள் இது பொருளாலும் இடத்தாலும் தலைமை பெற்று நிற்கும் சிறப்புடைமையால், இப் பாட்டு இதனால் பெயர் பெறுவ தாயிற் றென்றல் அமைவுடைத்து. சேரலர்க்கு வேந்தாய் அவர் வாழ்க்கைக்கு அரணாதலேயன்றி, “யாதும் ஊரே யாவரும் கேளிர்”என்ற கோட்பாட்டை யுடையராகிய பரிசிலர் வாழ்க்கைக்கு ஆக்கமாதல் பொருளாற் றலைமை. வேந்தனாயினான் தன் புகழ் பாடும் பரிசிலர்க்கு வேண்டுவன நல்கி அறம் வளர்க்கும் நலத்தை முதற்கண் ணோதி, இன்பப் பகுதிக் குரிய பாணர்களைப் பேணலைப் பின்பும், அவர் வாயிலாகப் பெறும் இல்வாழ்க்கை யியைபை அதன் பின்பும் கூறுதல் இடத்தால் தலைமை. பரிசிலர் வெறுக்கை யாதலால் நிலைபெறும் புகழ் இம்மைப்பயனும், வசையில் செல்வமுடைமையால் மறுமைப்பயனும் |