சுட்டப் படுதல் குறிக்கத்தக்கது. பாணர் எஞ்ஞான்றும் தம் இசைத் தமிழ் நலத்தை நாளோலக்கத்திருந்து காட்டற்கே பெரிதும் விரும்புவ ராதலின், அவரை அவர் விரும்புமாறே நாளோலக்கத்தே யேற்றுச் சிறப்பிக்கும் பான்மையன் என்பது தோன்ற, “பாணர் நாளவை” யென்றார். இனிப் பழையவுரைகாரர், “நாளவை யுடைமையாற் பாணர் நாளவை யென்றும் அவற்குப் பெயராயிற்”றென்பர். நாட்காலத்தே வேந்தன் திருவோலக்க மிருந்தவிடத்து முதற்கண் பாணரும் பின்னர் மகளிரும் போந்து இன்புறுத்துவ ராதலின், அம் முறையே, “பாணர் நாளவை” யென்றவர் இடையீடின்றி, “வாணுதல் கணவ” என்றார்; “பாண்முற் றுகநின் னாண்மகி ழிருக்கை, பாணமுற் றொழிந்த பின்றை மகளிர், தோண்முற் றுகநின் சாந்துபுல ரகலம்” (புறம். 29) என்று சான்றோர் கூறுதல் காண்க. இவற்றால் வேந்தனுடைய அருளும் அன்பும் சிறப்பித்தார்; இனி, அவனது மற மாண்பைக் குறிப்பார், போர் வீரரிடையே மடங்கா வலியுடைய அரிமாப் போல் விளங்குதலால், “மள்ள ரேறே” என்றும், மடங்குதற் கேற்ப, முகத்தினும் மார்பினும் விழுப்புண் பல பட்ட வழியும், மடங்காது பொருது வென்றி மேம்பட்ட திறத்தை, “மையற விளங்கிய வடுவாழ் மார்பின், வசையில் செல்வ” என்றார். வடுவாழ் மார்பாயினும் காட்சிக் கின்பம் பயத்தலின், “மையற விளங்கிய வடு” வென்றும், அறத்தாற்றிற் பெற்ற செல்வமாய் இம்மையிற் புகழும் மறுமையில் பேரின்பமும் பயக்கும் சிறப்புடைய செல்வ முடைமையின், “வசையில் செல்வ” என்றும் கூறினார். சேர மன்னர்க்குரிய சிறப்புடைப் பெயர்களுள் வான வரம்ப னென்பது சீரிதாதலால் “வான வரம்ப” என ஈற்றில் வைத்தோதினார்; “வான வரம்பன் என்ப” (பதிற். 58) என்றும், “வான வரம்பனை நீயே பெரும” (புறம். 2) என்றும், “வான வரம்பனெனப் பேரினிது விளக்கி” (பதிக. 6) என்றும் வருதல் காண்க. 13 - 16. இனியவை................மாறே. உரை : இனியவை பெறினே - நுகர்தற்கு இனிய பல பொருள்களைப் பெற்றவழி; தனி தனி நுகர்கேம் தருக - அவற்றைத் தனித்தனியாக நுகருவேம் எம்பால் கொணர்க; என - என்று; விழையா விரும்பாத; தாவில் நெஞ்சத்து - கெடாத நெஞ்சத்தால்; பகுத்தூண் தொகுத்த ஆண்மை - பிறர்க்குப் பகுத்துண்ணும் உணவைத் தொகுத்தளித்த ஆண்மையுடைமையால்; நீ பிறர்க்கென வாழ்தியாகன் மாறு - நீ பிறர்க்குப் பயன் உண்டாக வாழ்கின்றா யாதலால் எ - று. தனித்தனி நுகர்கே மெனற்பாலது எதுகை நோக்கித் தனி தனியென வியல்பாயிற்று. பெறுதற்கு அரியனவும் நுகர்தற்கு இனியனவும் ஆகிய பல்வகைப் பொருளும் பெற்றவழி, பெற்றார்க்கு அவற்றை ஒவ்வொன்றாகத் தனித்தனி நுகர்தற்கு விழைவு சேறல் இயல்பாதலின், “இனியவை பெறினே” யென்றும், “தனிதனி நுகர்கேம் தருக என” என்றும் கூறினார், அவ்வாறு விழைவு சென்றவழி, அதனைக் கெடுத்து, பிறரை நுகர்வித்தற்கண் ணெழுந்த வேட்கை கெடாது நுகரக் கொடுத்த சேரமானது அருள் நிறைந்த நெஞ்சத்தை, |