“விழையாத்தாவில் நெஞ்சம்” என்றார். இவ்வாறு தனக்கென விழையாது பிறர்க்கென விழையும் நெஞ்சுடையார்க் கன்றி, இனியவை தொகுத்தலும், தொகுத்தவற்றைப் பகுத்துண்டலும் இல்லையாதலால், தாவில் நெஞ்சத்தாற் “பகுத்தூண் தொகுத்த ஆண்மை” யென்றார். பாத்துண்டலை விழையாது தனித் தனியே உண்டற்கு விழையும் இனியவை பெற்ற வழியும், விழைவுவழி யோடும் நெஞ்சினை யடக்கி, அவ் விழைவினை யறுத்தலினும் ஆண்மைச் செயல் பிறிதியாது மின்மையின், “பாத்தூண் தொகுத்த ஆண்மை” யென்றார்.தொகுத்த வூண் முற்றும் பகுத்தூணாகப் பயன் படுத்துகின்றா னாதலால், சேரமானை, “நீ பிறர்க்கென வாழ்தி” யென்றார். இனி, “இனியவை நின்பாற் பெறின் தனி தனி நுகர்கேம்; தருக என விழைதற்கு முன்பே தாவில் நெஞ்சத்தோடு பகுத்தூண் தொகுத்தளித்த ஆண்மையால் நீ பிறர்க்கென நீ வாழ்தி” யென இயைத்துரைப்பினு மமையும். “தாவில் நெஞ்சத்துப் பகுத்தூண் தொகுத்த ஆண்மைப் பிறர்க்கென நீ வாழ்தி” என்றதனால், களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் பிறர்க்குரியாள னாதலை விளக்குதலின், அவன் தனக்கென வாழா னாதலை, அவன் நெஞ்சின்மேல் வைத்து, “இனியவை பெறினே தனி தனி நுகர்கேம் தருகென விழையாத் தாவில் நெஞ்சத்” தென்றார். எனவே, இவன் “தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன்” (அகம். 54) என்றவாறாயிற்று. மாறு, “அனையை யாகன் மாறே” (புறம். 4) என்புழிப்போல, ஏதுப்பொருள்படுவதோரிடைச்சொல்; இனிப் பழையவுரைகாரர், “மாறென்பது ஆனென்னுமுருபின் பொருள்படுவதோ ரிடைச்சொல்” (பதிற். 54, உரை) என்பர். 1 - 2 உலகத்தோரே....................மிகுமே. உரை : உலகத்தோர் செல்வர் பலர்மன் - உலகத்தில் வாழ்பவருள் செல்வமுடையோர் பலர்உளர்; எல்லா ருள்ளும் அவரெல்லாரும் பெற்றுள்ள புகழ்களுள்; நின் நல்லிசைமிகும் நினது நல்ல புகழே மேம்பட்டு நிற்கும் காண் எ - று. உலகத்துச் செல்வர்பலரும் பெற்றுள்ள புகழினும் நின் புகழே மி்க்கு நிற்கும்; இதற்கு ஏது நீ பிறர்க்கென வாழ்கின்றா யாதலால் என்பது எனவே, ஏனை யெல்லாரும் பிறர்க்கென வாழ்தலை யொழிந்து தமக்கென வாழ்தலே பொருளாகக் கொண்ட ரென்பதாம். இம்மை, மறுமை, வீடு என்ற மூன்றுக்குமுரிய நலஞ்செய்து கோடற்கு உரிய இடமாதலின், உலகத்தை மேற்கொண்டு, இம்மையில் இன்பவாழ்வும் புகழும், மறுமையில் துறக்கவின்பமும் வீடுபெறும் பெறுதற்குத் துணையாவது செல்வமாதலின், அதனை யுடையோரையே விதந்து “செல்வர் பலர்மன்” என்றார். “அறனீனு மின்பமு மீனும் திறனறிந்து, தீதின்றி வந்த பொருள்” (குறள். 754) என்றும், “அறனும் பொருளும் இன்பமு மூன்றும், ஆற்றும் பெருமநின் செல்வம்” (புறம். 28) என்றும் சான்றோர் கூறுதல் காண்க. எல்லாரும் பெற்ற புகழ், அவர் பொருளனவாய் நின்று மாய்ந்தன என்பார், “பலர்மன்” என்றார் மன்: ஒழியிசை கெடுவதின்மையின் “நல்லிசை” யென்றார். “மிகுமே” யென் றதனால், ஏனையோர் புகழெல்லாம் கெட்டழிய, இவனது நல்லிசை |