போலாது மயிரிழை போல்கின்றமையின், “நூலின் இழையா நுண்மயிரிழைய” என்றும், அச் சிலம்பி வலையைக் காணும் புறாக் கூட்டம் அஞ்சவேண்டாவாயினும் அஞ்சி நீங்குகின்றன என்றற்கு, “புறவின் கணநிரை யலறச் சிலம்பி கோலிய வலங்கற் போர்வை”என்றும் கூறினார். இழைய வென்னும் பெயரெச்சம், போர்வை யென்னும் பெயர்கொண்டது. வேல மரத்தின் கொம்பெல்லாம் சூழ்ந்து போர்த்தது போலத் தோன்றுதலின், சிலம்பி வலை “அலங்கற் போர்வை” யெனப்பட்டது.“கொலைவில் வேட்டுவன் வலை பரிந்து போகிய, கானப் புறவின் சேவல் வாய்நூல், சிலம்பி யஞ்சினை வெரூஉம், அலங்க லுலவையங் காடு” (நற். 189) எனப் பிறரும் கூறுதல் காண்க. பழையவுரைகாரர், “இழைய போர்வை யெனக் கூட்டுக” என்றும், “புறவின் கணநிரை யலறுதல் அப் போர்வையை வலையெனக் கருதி யலறுதல்” என்றும், “உலவை யஞ்சினை யென்றது, உலந்த சிறு கொம்பினையுடைய பெருங் கொம்பினை” யென்றும் கூறுவர். இனி, சரமானது நார்முடியின் அமைதி கூறுவார், நாராற் றொடுக்கப்படுமது முடிபோல் இனிது நின்று விளங்குதற்கு விளிம்பிலே மணிகள் இழைத்த பொற்றகட்டாற் கூடொன் றமைத்து, அதன் மேற்புறம் நாராற் பின்னப்பட்டு விளங்குதல் தோன்ற, “இலங்குமணி மிடைந்த பசும்பொற் படலம்” என்றும், “நார்முடிச் சேரல்” என்றும் கூறினார். “இலங்குமணி மிடைந்த பசும்பொற் படலமென்றது, விளிம்பு மணியழுத்திய பொற்றகட்டாற் செய்த கூட்டினை” யென்பது பழையவுரை.இவ்வாறமைந்த முடியின்மேல் நாரால் போர்வை போலப் பின்னி வைத்த முடியின் தோற்றம் சிறக்குமாறு முத்து வடங்கள் நூலிற்கோத்து அணியப்பட்டன வென்பார், “சீர்மிகு முத்தந் தைஇய நார்முடி” யென்றார். இம் முத்து வடங்கள் அழகிய ஒளிகான்று சிறக்கவேண்டி விளங்குகின்ற இழைகள் பல இடையிடையே வைத்துப் புனையப்பட்டமை தோன்ற, “அவிரிழை தைஇ மின்னுமிழ் பிலங்க” என்றார். இனிப் பழையவுரைகாரரும், போர்வையின் முத்தம் தைஇய வென்றது, அப் போர்வையை முத்தாற் சூழுமாறு போல அக் கூட்டினைச் செறிந்த நார்முடியின் பொல்லாங்கு குறைதற்கு முத்துவடங்களைச் சூழ்ந்தவென்றவா” றென்றும், “போர்வையின் முத்தந் தைஇய பசும்பொற் படலத்து நார் முடி என்று மாறிக் கூட்டுக” என்றும் கூறுவர். நார்முடிமேற் சூழ்ந்து கிடந்த முத்து வடத்துக்கு, சிலம்பி கோலிய வலையுவமம். அவிரிழை தைஇ யென்பதற்குப் பழையவுரைகாரர், “விளங்கின நூலாலே முத்தைக் கோத் தென்றவா” றென்பர். வேலத்து உலவை யஞ்சினைக்கண், புறவின் கணநிரைகண்டு அலறிச் சிதையுமாறு, சிலம்பி கோலிய நுண்மயிர் இழைய அலங்கற் போர்வையின், மணிமிடைந்த பொற்படலத்து, அவிரிழை தைஇ மின்னுமிழ் பிலங்க, முத்தந் தைஇய நார்முடியினை யணிந்த சேரமானே என இயைத் துரைக்க போர்வையின் என்புழி, இன்னுருபு ஒப்புப் பொருட்டு. வேலத்தின் சிலம்பி கோலிய அலங்கற் போர்வை, புறவின் கணநிரை கண்டு அலறிக் கெடுதற்கு ஏதுவாதல் போல,நின் பெரும் படை மாண்பும், சேய்மைக்கட் கண்ட துணையானே நின் பகை வேந்தர் அஞ்சிக் கெட்டொழிதற் கேதுவாம் என உள்ளுறுத்துவாறு பெற்றாம். பெறவே, இதனால் சேரமானது வென்றிச் சிறப்பு உடன் கூறியவாறு விளங்கும். |