1 - 2. பிறர்க்கென............குழாத்தர். உரை : நின் மறங் கூறு குழாத்தர் - நின் வீரமே யெடுத்தோதிப் பரவி மறம் சிறக்கும் நின் படை வீரரும் ; நின் போர் நிழல் புகன்று - நின்னுடைய போராகிய நிழலையே விரும்பி வாழ்வாராயினும் ; நீ பிறர்க்கென வாழ்தி யாகன்மாறு - நீ பிறர்க்குரியாளனாய் வாழ்கின்றாயாதலால் ; எமக்கு இல் என்னார் - தம்பால் இரக்கும் எம் போல்வார்க்கு இல்லையென்னாது வேண்டுவன நல்குவர் எ - று. எனவே,நின் படைவீரரும் நின்னைப் போலவே பிறர்க்குரியாளராய் வாழ்கின்றனர் என்பதாம். மறஞ் செருக்கும் வீரர் தம்முடைய தலைவர் வீரமே எடுத்தோதி மேம்படுதல் இயல்பாதலால், “நின் மறங் கூறு குழாத்தர்” என்றார். “என்னைமுன் னில்லன்மின் றெவ்விர் பலரென்னை, முன்னின்று கன்னின் றவர்” (குறள். 771) எனப் படைவீரர் தம் தலைவன் வீரத்தையெடுத்தோதுதல் காண்க. போருழந்து பெறும் வென்றியே வாழ்வின் பயனாகக் கொண்டு அதனையே விரும்பி வாழ்தல் மறவர் மாண்பாயினும், நின்னைத் தலைவனாகக் கொண்டு செய்யும் போர் அவர் தம் குறிக்கோளாகிய வென்றியைத் தப்பாது பயத்தலின் “நின் போர்நிழல் புகன்று” என்றார். தாள்வழி வாழ்வாரைத் தாணிழல் வாழ்வார் (புறம். 161) என்பதுபோல, போர்வழி வாழ்வாரைப் போர்நி்ழல் வாழ்வார் என்றார். போர் நிழல் புகன்றென்பதற்குப் பழையவுரைகாரர், “நின் போராகிய நிழலை என்றும் உளவாக வேண்டுமென்று விரும்பி யென்றவா” றென்பர். போரை நிழ லென்றதற்குப் பழையவுரைகாரர், “போரை நிழலென்றது, அப் போர்மறவரது ஆக்கத்துக்குக் காரணமாகலின்” என்றார். தலைமகன் போல அவன் போர்நிழல் வாழும் வீரரும் கொடையுள்ளத்த ராயினரென்றற்கு, “பிறர்க்கென வாழ்திநீ யாகன்மாறு” என்பர். நின் படைகொண் மாக்கள்.............வருநர்க் குதவியாற்றும் நண்பிற் பண்புடை யூழிற்றாக நின் செய்கை” (புறம். 29) எனச் சான்றோர் கூறுதல் காண்க. இதுகாறும் கூறியது, வெப்புடைத் தும்பைப் போர்க்கண் தெவ்வர் கடிமுனை யலறுமாறு இரங்கும் ஏவல் வியன்பணை உருமென அதிர்பட்டு முழங்குதலால் செருமிக்கு, அடங்கார் ஆரரண் வாடச் செல்லும் காலன் அனைய முன்ப, துப்புத்துறை போகிய கடுஞ்சின முன்ப, வேலத்து உலவையஞ்சினைக்கண் சிலம்பி கோலிய நுண்மயி ரிழைய அலங்கற் போர்வை போல, மணிமிடைந்த பசும்பொற் படலத்து, இழை தைஇ மின்னுமிழ் பிலங்க, முத்தம் தைஇய நார்முடிச் சேரல்,நீ பிறர்க்கென வாழ்தி யாகலான் நின் மறங்கூறு குழாத்தர் நின் போர் நிழற் புகன்று வாழ்வாராயினும் எமக்கு இல்லென்னாது உதவுவரென்பதாம் இனிப் பழையவுரைகாரர், “முன்ப, சேரல், நீ பிறர்க்கென வாழ்தியாகலான், நின் மறங்கூறு குழாத்தர் நின் போர்நிழற் புகன்று எமக்கு இல்லை யென்னார் எனக் கூட்டி வினைமுடிவு செய்க” என்றும், “இனி இதற்குப் பிறவாறு கூட்டி வேறு பொருள் உரைப்பாருமுள” ரென்றும் கூறுவர். |