போன்று, நீ இவ்வுலக மக்களைப் பாதுகாத்தல் வேண்டும் என ஒன்றினை ஒத்தும், அம்மழை வெண்மேகமாகிக் கழிவது போன்று நின் வாழ்நாள் கழிதலாகாது என ஒன்றை ஒவ்வாமலும் சேரலாதனுக்கு உவமை கூறி வாழ்த்தினமை இப்பழைய வுரைக்குறிப்பால் உய்த்துணர்ந்து கொள்ளலாம். ஆனால், ‘சென்றா லியரோ’ என்னும் பாடம் இப்பொருட்கு நேர்முரணாகக் காணப்படுகின்றது. இப்பாடத்தின் பொருந்தாமையினை யுணர்ந்த இவ்விரிவுரையாசிரியர் ஏடுகளை ஒப்புநோக்கிச் ‘சென்றறாலியரோ’ எனத் திருத்தமான பாடத்தினை உணர்ந்து வெளியிட்டமை பெரிதும் பாராட்டத் தகுவதொன்றாம். சென்றறாலியர் என்னுந் தொடரினைச் சென்று அறாலியர் என இரண்டு சொல்லாகப் பிரித்து, சென்று என்பதனை “வேண்டுவ அளவையுள் யாண்டு பல கழிய மழைபோலப் பெய்து புறந்தந்து சென்று” எனவும், அறாலியர் என்பதனைப் “பொங்கலாடி விண்டுச்சேர்ந்த வெண்மழைபோல அறாலியர்” எனவுந் தனித்தனி இயைத்து உரைக்கும்வழிப் பழையவுரையாசிரியர் கருத்து இனிது புலனாதல் காண்க. 56-ஆம் பாடலில் “வலம்படு முரசந் துவைப்ப வாளுயர்த்து, இலங்கும்பூணன், பொலங்கொடி யுழிஞையன்” என்னுந்தொடரிலுள்ள வினைக்குறிப்பு முற்றுக்களை எச்சப் பொருளவாகக் கொண்டு இவ்வாசிரியர் கூறும் உரைநுட்பம் நச்சினார்க்கினியர் உரைகளில் இடைவிடாது பயின்ற தெளிவினைப் புலப்படுத்துகின்றது. 56-ஆம் பாடல் ‘வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி’ என்னும் பெயருடையதாகும். வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி யென்து, பகைவேந்தர் தங்கள் மெய்யை (உடம்பை) மறந்து சேரலாதனோடு எதிர்த்து நின்று பொருது மடிந்தமை காரணமாக அதன் காரியத்தால் சேரலாதனுக்கு வந்து எய்திய வெற்றிவாழ்வாகும் எனவும், மறந்த வாழ்வு என்ற தொடரில் காரணப் பொருட்டாகிய ‘மறந்த’ என்னும் பெயரெச்சம் வாழ்வு என்னும் காரியப் பெயர்கொண்டு முடிந்ததெனவும் பழைய வுரையாசிரியர் பாட்டின் பெயர்க்காரணங் கூறினார். இவ்விரிவுரையாசிரியர் “வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி” என்பதற்குப் “பகைமையாற் போர் மேற்கொண்டு வந்து பொருத வேந்தர் தம்முடம்பைத் துறந்து சென்று துறக்கத்தே பெறும் வாழ்வு” எனப் பொருள்கூறிப், பகைவேந்தர் யாக்கைநிலையாமையை நன்குணர்ந்து தம் உடம்பை மறந்து என்றும் நிலைத்த புகழை விரும்பி இறக்க அதனால் அவர்க்குளதாகும் துறக்கவாழ்வினைச் சிறப்பித்துரைத்தலால் இப் பாடல் வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி என்னும் |