துறை : விறலியாற்றுப்படை. வண்ணமும் தூக்கும் அது. பெயர் : நாடுகா ணவிர்சுடர். 1 - 9. போர்நிழல் ............ தேய. உரை : பெரும - பெருமானே ; இன்னிசை இமிழ் முரசியம்ப - இனிய இசையைச் செய்கின்ற முரசு முழங்க ; கடிப்பு இகூஉ குணிலோச்சிப் புடைத்துக்கொண்டு ; புண் தோள் ஆடவர் போர்முகத்து இறுப்ப - தோளிற் புண்பட்ட போர் வீரர் போரின் முன்னணியில் நிற்க ; தானை - தூசிப் படை ; காய்த்த கரந்தை மாக்கொடி விளை வயல் - காய்த்த கரந்தையின் கரிய கொடி படர்ந்த விளை புலத்தே ; வந்து இறை கொண்டன்ற வந்து தங்கிற்றாதலான் ; நின் தானை - நின்னுடைய பெரிய சேனை வீரர் ; போர் நிழற் புகன்ற சுற்றமொடு - போரிடத்தேயுண்டாகும் ஆக்கத்தை விரும்பும் சுற்றத்தாருடனே ; ஊர் முகத்து இறாலியர் போர்நிகழும் முனையிடத்தே தங்கா தொழிவாராக ; இனி - இப்பொழுது; களைநர் யார் பிறர் - எமக்குப் புகலாய் அரண் தந்து காப்பவர் வேறே பிறர் இலர் ; எனப் பேணி என்றெண்ணி நின்னை விரும்பி ; ஒன்னார் தேய - பகை யரசர் வலி தேய்ந்து நீங்குதலால் ; மறவர் - அப் பகை மன்னருடைய சிற்றரண்களில் இருந்து காக்கும் வீரர் ; மன்னெயில் ஒலி யவிந்து அடங்க - நிலைபெற்ற மதிலிடத்தே ஊக்கமிழந்து ஆரவாரமின்றி ஒடுங்கி யடங்க எ - று. போரெனிற் புகலும் மறவராதலின், அவர் வேட்கைக் கொப்பப் போர்மேற் செலவினை ஏவும் குறிப்பிற்றாதலின், முரசின் முழக்கத்தை விதந்து, “இன்னிசை யிமிழ் முரசு” என்றார். புண்தோ ளாடவ ரென்றதனால் முன்னே பல போர்களைச் செய்து வெற்றிப் பேற்றால் மேம்பட்டவரென்பது பெற்றாம். தோளாடவர் போரேற்று முன்னிற்ப, தூசுப்படை வயலிற்றங்குதலின், நின்னைச் சூழ்ந்து வரும் மூலப்படையாகிய சுற்றத்தாருடன் நீ போர்க்களம் சேறல் வேண்டா என்பார்,“நின் தானை இறாலியரோ” என்றார். சுற்றமென்றது, தானைத் தலைவரையும், தானை யென்றது மூலப்படையினையும் குறித்து நின்றன. புண்தோ ளாடவரும் ஏனைத் தூசிப்படையுமே வென்றி பெறுதற்கு அமைந்திருப்ப, நீ நின் தானையும் சுற்றமும் வர ஊர்முகஞ் சென்றிறுத்தல் வேண்டா என்பார், “போர்நிழற் புகன்ற சுற்றமொடு ஊர் முகத்து, இறாலியரோ பெரும நின் தானை” யென்றார். போர்நிழல் என்பதற்குப் போரிடத் துண்டாகும் புகழாகிய ஒளியென்றலுமொன்று ; இதனை “ஆற்றருந் துப்பின் மாற்றோர் பாசறை, உளனென வரூஉம் ஓரொளி” (புறம் . 309) எனச் சான்றோர் கூறுதல் காண்க. |