நனை நறவு மகிழ்ந்து - அவருடனிருந்து தான் உண்டல் வேண்டித் தனக்கெனக் கொணரப்பட்ட பூவரும்புகளாற் சமைக்கப்பட்ட நறவினையுண்பதனால் களிப்புற்று; புன் கால் உன்னம் சாய - புல்லிய காலையுடைய உன்னமரம் வாடிய வழியு மஞ்சாது ; நீர் இமிழ் சிலம்பின் நேரியோன் - அருவி நீர் வீழ்தலால் ஒலிக்கின்ற மலையாகிய நேரிமலை யிடத்தேயுள்ளான் எ - று. வறிது, சிறிது. களிப்பு மிகுவிக்கும் பொருள்களைப் பெரிது கூட்டியவழி உண்டார்க்கு மிக்க மயக்கத்தைச் செய்யுமென்பது கருதி, “வறிதுகூட் டரியல்” என்றார். அரியல், வடித்த கள். தெண் கள் என்றதனால், அரியல் பெறுவது கருதுவார் தெளிந்த கள்ளோடே களிதரும் பொருள்களைக் கூட்டுவ ரென்பது பெறப்படும். உண்டு களிக்குந் தோறும் மேன்மேலும் அதனை யுண்டற்கே கள்ளுண்பார் விரும்புவராதலின், இரவலர் கள்ளுணவால் எழுந்த வேட்கையால் பிரியா துறைவாராயின ரென்றற்கு, “இரவலர்த் தடுப்ப” என்றார். எனவே, அவன் தரும் பெருவளத்தி்னும் கள்வளம் இரவலர்க்கு மிக்க விருப்பத்தை யுண்டுபண்ணு மென்பதாம். “களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றால்” (குறள். 1145) என்பதனால் கள்ளுண்பார் மேலு மேலு மதனையே விரும்புமாறு துணியப்படும். இரவலரைக் கள்ளுண்பிப்பவன் மிக்க களிப்புள்ளதனை நல்கின் அவர் அறிவு மயங்கிச் செம்மை நிலை திரிவராதலாலும், அவருடனே வேந்தனு மிருந்துண்ணுதல் மரபாதலாலும் தெண்கள் வறிது கூட் டரியலே தரப்படுவதாயிற்றென வறிக. இரவலர்க்கு அரியலும். தனக்கு நனைநறவும் தரப்படுதலின், “தான் தரவுண்ட நனை நறவு மகிழ்ந்து” என்றார். நறவாவது, பழச்சாறுகளாலாக்கப்பட்டு நறிய பூக்களால் மணமூட்டப் பெற்றுக் களிப்பு மிக மிகக் குறைவாக உள்ளது. உன்னம், ஒருவகை மரம். இது வேந்தர்க்கு ஆக்க முண்டாயின், முன்பே நற்குறியாகக் குழைந்து காட்டுமென்றும், கேடு விளைவதாயின் தீக்குறியாகக் கரிந்து காட்டுமென்றும் கூறுப. இந் நார்முடிச் சேரல், உன்னம் கரிந்து காட்டியவழியும் அஞ்சாது இருக்குமாறு தோன்ற, “புன்கா லுன்னஞ் சாய” என்றார். சிறப்பும்மையும் அஞ்சாதெனவொரு சொல்லும் வருவிக்கப்பட்டன. கரிந்து காட்டியவழியும் பகைவர்மேற் சென்று வென்றி யெய்தியுள்ளா னாதலின், உன்னஞ் சாயவும் அஞ்சாது நேரியிலேயிருப்பானாயின னென்க. இதனால் இம்மேற்கோளுடைய வேந்தரை, உன்னத்துப் பகைவ ரென்றலும் வழக்கு. செல்வக் கடுங்கோ வாழியாதனை ஆசிரியர், கபிலர், “புன்கா லுன்னத்துப் பகைவன் எங்கோ” (பதிற். 61) என்பது காண்க. இனிப் பழையவுரைகாரர், “உன்னம் சாய வென்றது, தன்னொடு பொரக் கருதுவார் நிமித்தம் பார்த்தவழி அவர்க்கு வென்றியின்மையிற் கரிந்து காட்ட வென்றவா” றென்பர். எனவே, பகைவர் காணுந்தோறும் கரிந்து காட்ட வேண்டி வேந்தர் உன்னத்தை யோம்பாது பகைப்ப ரென்பது பட்டுப் பொருள் சிறவாமையறிக. “வறிது கூட்டரியலென்றது, களிப்பு விறக்க விடும் பண்டங்கள் பெருகக் கூட்டின் களிப்பு மிகுமென்று அவையளவே கூட்டின அரிய லென்றவா” றென்றும், “கானென்பதனைச் சேரல்தான் எனக் கூட்டித் தர வுண்ட வென்பதனை |