வரையாது கொடுத்தற்பொருட்டு உண்ட வென வுரைக்க” வென்றும், “இனியிதற்குப் பிறவாது உரைப்பாரு முள” ரென்றும் பழையவுரைகாரர் கூறுவர். நார்முடிச் சேரல், அரியல் இரவலர்த் தடுப்ப, தான் நனைநறவு மகிழ்ந்து, உன்னம் சாயவும், அஞ்சாது நேரிமலையில் உள்ளான் என முடித்துக் கொள்க. 21 - 31. செல்லாயோதில் ................... பலவே. உரை : சில் வளை விறலி - சிலவாகிய வளைகளையணிந்துள்ள விறலியே; மலர்ந்த வேங்கையின் - பூக்கள் மலர்ந்துள்ள வேங்கை மரத்தைப் போல; மெல்லியல் மகளிர் - மென்மையான இயல்பினையுடைய ஏனைய விறலியர்; வயங்கு இழையணிந்து எழில் நலம் சிறப்ப - விளங்குகின்ற இழைகளையணிந்து உயர்ந்த அழகு சிறந்து விளங்கவும்; பாணர் பைம்பூ மலைய - பாணர்கள் பொன்னாற் செய்த பசிய பூக்களை யணிந்து கொள்ளவும்; இளையர் இன்களி வழா மென்சொல் அமர்ந்து - ஏவல் இளையர் இனிய களிப்பாற் குன்றாத மெல்லிய சொற்களை விரும்பிச் சொல்லி; நெஞ்சுமலி யுவகையர் - நெஞ்சு நிறைந்த உவகையினை யுடையராய்; வியன் களம் வாழ்த்த - நார்முடிச் சேரலின் பெரிய போர்க்களத்தின் சிறப்பை யெடுத்தோதி வாழ்த்தவும்; தோட்டி நீவாது - பாகர் தோட்டியாற் குறிக்கும் குறிப்புத் தவறாமல்; தொடி சேர்பு நின்று - தொடியாகிய பூண்செறிந்து நின்றே; ஒண்பொறி சிதற - தம்மால் எழுப்பப்படும் ஒள்ளிய புழுதித் துகள் தீப்பொறி போலச் சிதறுதலால்; காடுதலைக் கொண்ட காட்டிடத்தே யெழுந்த; நாடுகாண் அவிர் சுடர் அழல் விடுபு நாட்டவரால் இனிது காணப்பட விளங்கும் காட்டுத் தீப் போலும் சினமாகிய தீயைக் கைவிட்டு; பாகர் ஏவலின் மரீஇய மைந்தின் அப் பாகரது ஏவலைப் பொருந்தியமைந்த வலியினையும்; தொழில் புகல் யானை - வேண்டுந் தொழில்களைச் செய்தற்கு விரும்பும் விருப்பத் தினையுமுடைய யானைகள்; பல நல்குவன் - பலவற்றை வழங்குவனாதலால்; செல்லாய் - செல்வாயாக எ - று. மெல்லியல் மகளிர் இழை யணிந்து நலஞ்சிறப்ப, பாணர் பூ மலைய ஏவலிளையர் வியன் களம் வாழ்த்த, மைந்தினையும் புகற்சியினையடைய யானை பல நல்குவன்; செல்லாய் என இயைக்க. மலரணிந்த வேங்கை மரத்தின் எம்மருங்கும் பைந்தழையும் பூவும் பொலிந்து தோன்றும் தோற்றம், தலை, காது, மூக்கு, கழுத்து, மார்பு, தோள், கை. இடை, கால் ஆகிய எம்மருங்கும் இழை யணிந்து விளங்கும் மகளிர் போல விருத்தலின், “மலர்ந்த வேங்கையின் வயங்கிழை யணிந்து மெல்லியல் மகளிர் எழினலஞ் சிறப்ப” வென்றார். மலர்ந்த வேங்கைக் கண்ணிருந்த தோகையைக் கண்ட சான்றோர், “எரிமருள் வேங்கை யிருந்த தோகை, இழையணி மடந்தையிற் றோன்றும்” (ஐங். 294) என்பது காண்க. அரசன் புகழ் பாடிய விறலி இழை பெறுதலும், |