பக்கம் எண் :

227

இயங்குதலால்     கடுங்சினமுடையது  போலும்    என   அதனைப்
பரிசிலாகப்   பெறும்  பாணர்  அஞ்சாமைப்  பொருட்டு,  சினத்தின்
இயல்பை, “நாடுகாணவிர்சுடர் அழல்” என விளக்கி, அச் சினமின்றிப்
பாகர் ஏவல் வழியொழுகும் இயல்பிற் றென்றற்கு, “அழல் விடுபு,பாகர்
ஏவலின்   மரீஇய”   தென்றும்,  சினமுற்றவழியும்  பாகல்  ஏவலின்
மரீஇயதனால்,  சினத்தைச்  செயற்படுத்தும்  வலி குறைந்தது போலும்
என  அயிராமைப்  பொருட்டு, “மரீஇய மைந்தின்” என்றும் கூறினார்.
பாகரேவலின்,  மரீஇய மைந்தின் யானை, தொழில்புகல் யானை யென
இயையும்.    இனிப்   பழையவுரைகாரர்,   “சுடரழ   லென்றதனைச்
சுடர்போலும்   அழலென   வுவமத்  தொகையாக்கி அழலை  அந்த
யானையின்    சீற்றத்தீ   யாக்குக”   வென்றும்,   “மரீஇயவென்றது,
அவ்வாறழல் விட்டும்  பாக  ரேவலொடு மரீஇயவென்றவா” றென்றும்
கூறுவர்.     தோட்டி    நீவுதற்கேற்றசின    முண்டாகிய   வழியும்
அச்சினத்துவழியோடாது  அடக்குவதும்,  மரீஇய  நெறிவழிப்  பிறழா
தொழுகுதலும்   வன்மையின்   நற்பயனாதலின்,   “மரீஇய    மைந்”
தென்றார்.   மருவுதற்கேதுவாகிய   மைந்து   ஏதுப்பெயராய் மரீஇய
வென்னும்   பெயரெச்சத்தை   முடித்து   நின்றது.  பாணர்  பெறும்
பரிசிலாகிய யானை மறம் புகல் யானையாயின் பயனின் றாதலால், பல
தொழிலும்   பயின்ற   யானையென்றும்,   மறத்  தொழிலினும்  பிற
தொழில்களை  விரும்புவதென்றும்  தோன்ற, “தொழில் புகல் யானை”
யென்றார்.     புகல்,    ஈண்டு    முதனிலைத்   தொழிற்பெயராய்,
மைந்தினையும்,  புகலினையுமுடைய  யானை யென  இயைய நின்றது.
இனிப்    புகல்   யானையைப்   புகலும்   யானையாகக்   கொண்டு
வினைத்தொகை  யாக்கலுமொன்று;  அல்ல  தூஉம்,  பல  தொழிலும்
பயின்ற   தென்  எல்லாரானும்  விரும்பிப்  பாராட்டப்படும்  யானை
யென்றுமாம்  ;  பிறரும் “தொழில் நவில் யானை” (பதிற். 84) என்ப ;
அதற்குப்    பழையவுரைகாரர்,    “போர்க்குரிய   யானை  யென்று
எல்லாராலும்  சொல்லப்படுகின்ற  யானை” யெனப் பொருள் கூறுவர்.
செல்லாய்,  செய்யயென்னும் முன்னிலை வினைமுற்று, (தொல். சொல்.
எச்ச.  54)  ;  எதிர்மறைப் பொருளாகாது செல்லென்னும் பொருள்பட
வந்தது  -  ஓ  ;  அசைநிலை. தோட்டி நீவாது தொடி சேர்பு நின்றே
தம்மால்  எழுப்பப்படும்  துகள் ஒண்பொறி பிசிர, அது கண்டு, அவிர்
சுடர்  அழல்  விடுபு, பாகர் ஏவலின் மரீஇய மைந்தினையும் தொழில்
புகற்சியினையுமுடைய யானை பல நல்குவன் என இயையும்.
  

இதுகாறுங்     கூறியது,   நார்முடிச்  சேரல்,  நீரிமிழ்  சிலம்பின்
நேரியோன்  ;  சில்வளை  விறலி,  நீ  செல்லின், அவன் வயங்கிழை
யணிந்து  மகளிர்  நலஞ்  சிறப்ப,  பாணர் பைம்பூ மலைய, இளையர்
உவகையராய்,   வியன்   களம்  வாழ்த்த,  மைந்தினையும்  தொழில்
புகற்சியினையுமுடைய  யானை  பல நல்குவன் ; ஆதலால், செல்லாய்
என்பதாம்.  பழையவுரைகாரர்,  “சேரல்  தான், நேரியோன், இளையர்
களம்  வாழ்த்த. மகளிர் மலர்ந்த வேங்கையின் இழை யணிந்து நலஞ்
சிறப்ப,  பாணர்  பூமலைய யானையைப் பல நல்குவன் ;  ஆனபின்பு,
விறலி நீ, செல்லாயோ எனக் கூட்டிவினை முடிவு செய்க” என்பர்.
  

“இதனாற்     சொல்லியது,     அவன்     கொடைச்  சிறப்புக்
கூறியவாறாயிற்று”.

நான்காம் பத்து மூலமும் உரையும் முற்றும்.