பெயருடையதாயிற்று எனப் பெயர்க்காரணமுங் கூறினார். பகை வேந்தர் தமக்குரிய பருவுடம்பை மறந்து போர்செய்தலால் அவர் பெறுந் துறக்க வாழ்வினை மெய்ம்மறந்த வாழ்ச்சி என்றார் என்னும் இவ்வுரை “நத்தம்போற் கேடும் உளதாகும் சாக்காடும், வித்தகர்க் கல்லால் அரிது” என வருந் திருக்குறட்குப் பரிமேலழகர் கூறிய உரைப்பொருளையுளங்கொண்டு எழுதிய அருமையுடையதாகும். மக்கள் தம் புகழுடம்பு செல்வமெய்தப் பூதவுடம்புக்கு உண்டாகும் வறுமையை ‘ஆக்கமாகுங் கேடு’ எனவும், புகழுடம்பு நிலைபெறப் பூதவுடம்பு இறத்தலை ‘உளதாகுஞ் சாக்காடு’ எனவும், கூறி இவ்வாறு நிலையாதவற்றால் நிலையுடையன எய்துவார் சதுரப்பாடுடையராகலின் அன்னோரை “வித்தகர்” என மேற்காட்டிய குறளில் தெய்வப்புலவர் அறிவுறுத்தினரெனவும் உரையாசிரியர் பரிமேலழகர் நன்கு விளக்கியுள்ளார். இந் நுட்ப மனைத்தும் ‘வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி’ என்னும் ஒரு தொடரிற் புலனாதல் கொண்டு இப்பாடல் இதனாற் பெயர்பெற்றது என இவ்வுரையாசிரியர் கூறும் காரணம் அறிஞர்களாற் பாராட்டத்தகும் சிறப்புடையதாம். 70-ஆம் பாடலில் ‘உடைநிலை நல்லமர்’ என்ற தொடர்க்குப் பகையரசருடைய நிலையாகிய நல்ல போர் என்ற பொருள் பிற்காலக் குறிப்புரையிற் காணப்படுகின்றது. இத் தொடர்க்கு ‘என்றும் தமக்கேயுடைமையாகப் பெற்ற நல்ல போர்’ எனப் பொருள் கூறி, “போருடற்றுதலும் அதன்கண் வெற்றிபெறுதலும் தமக்கு நிலையாகக்கொண்டு சிறக்கும் வேந்தரென்பார் பகைவேந்தரைக் கடுஞ்சின வேந்தரென்றும் உடைநிலை நல்லமர் என்றும் கூறினார்” (பக். 332-3) என விரிவுரையாசிரியர் தரும் விளக்கம் பொருத்தமுடையதாக அமைந்துள்ளது. 71-ஆம் பாடலில் ‘அருவியாம்பல்’ என்பதற்கு நிறைந்த பூக்களாகிய ஆம்பல் எனப் பொருள் கூறினர். இப் பொருளுக்கு ஆர்வீ என்பது, அருவீ எனத் திரிந்து பின் அருவி எனக் குறுகிற்று எனக் கூறிக் கலித்தொகை 22-ஆம் பாடலில் ஆர்ந்து என்னுஞ் சொல் அருந்து எனத் திரிந்து நின்றதனை மேற்கோளாகக் காட்டியுள்ளமை இவர்தம் பழைய உரைநூற் பயிற்சியினைத் தெளிவுபடுத்துகின்றது (பக்.340) 73-ஆம் பாடலில் “உரவோர் எண்ணினும் மடவோ ரெண்ணினும்” என்னுந் தொடர்க்குப் பிறர் கூறுமாறு இரண்டாம் உருபு விரித்து உரைகூறிய இவ் வாசிரியர் “இனி உரவோர் தாம் எண்ணினும் மடவோர் தாம் எண்ணினும் இருதிறத்தோரும் நின்னையே உவமமாகக்கொண் |