துறை : காட்சி வாழ்த்து. வண்ணம் : ஒழுகுவண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : சுடர்வீ வேங்கை. 1 - 2. புணர் புரி ...................... பொறுப்ப. உரை : புணர்புரி நரம்பின் - இசை புணர்த்தற்கு முறுக்கிய நரம்பிடை யெழும் ; தீந் தொடை பழுனிய - இனிய இசையைச் செய்வதாகிய; வணர் அமை நல்யாழ் - வளை வமைந்த கோட்டினையுடைய நல்ல யாழை; இளையர் பொறுப்ப ஏவலிளையர் சுமந்து வர எ - று. யாழிற் புணர்த்து இசை யெழுப்புதற்காக முறுக்கிய நரம்பாதலின் ‘புணர்புரி நரம்பு’ என்றார். இனிப் புணர்தல் மத்தளத்தின் தாளத்தோடு பொருந்துத’ லென்றுமாம். தீந்தொடை, இன்னிசை; “தீந்தொடைச் செவ்வழிப் பாலை” (சிலப். கானல்.) என்று அடிகளும் கூறுதல் காண்க. வணர், யாழ்க்கோட்டின் வளைவு; “வணர் கோட்டுச் சீறியாழ்” (புறம். 155) என வருதல் காண்க. நல் யாழ் பேரியாழும், இளையர், பாண் மகளிரும், இசை பயிலும் இள மாணாக்கருமாம். 3 -6. பண்ணமை ........................ பழிக்க. உரை : பண்ணமைமுழவும்-பண்ணோடு பொருந்து மாறமைந்த முழாவும்; பதலையும் - ஒருகண் மாக் கிணையும்; பிறவும் - பிற இசைக்கருவிகளும்; கண்ணறுத் தியற்றிய தூம்பொடு - மூங்கிற் கணுவை யிடைவிட் டறுத்துச் செய்யப்படும் பெருவங்கியம் என்னும் வாச்சியத் தோடு; சுருக்கி - ஒருங்கே சேர்த்து; தகைத்த காவில் - ஒருபுறத்தே கட்டின காவடியின் மறுபக்கத்தே; துறை கூடு கலப்பையர் - பாடற்றுறைக்கு வேண்டிய கருவி யெல்லாம் கூடின மூடையைச் சுமந்தவராய்; கைவல் இளையர் கடவுள் பழிச்ச - இசைத்துறையில் வல்ல இளையவர்கள் தாம் செல்லும் வழியில் தீங்கு வாராமை குறித்துக் கடவுளைப் பரவி வர எ - று. 1. நாளே - பாடம் |