அழகுண்டாக அணிந்துகொடு ; சேர்எர் உற்றசெல் படைமறவர் - பலராய்த் திரளுதலையுற்ற பகைமேற் சேறலையுடைய படைவீரர் ; தண்டுடை வலத்தர் - வலக்கையில் தண்டேந்திச் சென்று ; போர் எதிர்ந்தாங்கு - போரிடத்தே பகைவர் எதிர் நின்று ஆரவாரித்தாற் போல ; வழை யமல் வியன் காடு சிலம்பப் பிளிறும் - சுர புன்னைகள் நிறைந்த காட்டகம் எதிரொலிக்குமாறு பிளிறும் எ - று. கரும் பாறைகள் செறிந்த மலையின் பக்கத்தே பெரியதொரு பாறையைச் சேரநின்ற வேங்கை மரத்தின் பூ நிறைந்த தோற்றம், புலியின் மேனியிற் காணப்படும் தோற்றத்தைக் காட்டி, யானையை நடுங்குவித்ததாக, நடுங்கிய அவ் யானை சினம் மிகுந்து தன்னை வறிதே நடுங்குவித்ததற்குத் தண்டமாக, அவ் வேங்கையின் பூவுடைப் பெருஞ்சினையை வாங்கிப் பிளந்து சினந் தணிவதாயிற் றென்பதாம். வய, வலி. புதுப்பூ வென்றற்குச் சுடர்வீயென்றார். பூக்களின் நிறமும் ஒளியுமே புலியின் மேனி நிறமும் ஒளியும் காட்டி யானையின் உள்ளத்தில் அச்சமும் நடுக்கமும் எழுப்பின வாதலின் “சுடர்வீ வேங்கை” யென்றும், “மறப்புலிக் குஉக் குரல்” என்றும் கூறினார். நிறமும் ஒளியும் புலியின் மேனி மயிர்போல் காணப்படுதலால், அதனைக் “குஉக் குரல்” என்றார். குரல், மயிர்;“கொடியியல் நல்லார் குரல்” (கலி. மரு. 23) என்பது காண்க. “வயக்களிறு” என்ற குறிப்பால், முன்பொருகால் இக்களிறு புலியொடு பொருது வெற்றிபெற்ற தென்றறியலாம். வேங்கைப் பூக்கட்குப் பின்னே மலைப்பக்கத்துத் துறுகல் நின்று வேங்கையின் தோற்றத்தைத் தோற்றுவித்த தென்பது “வரைசேர் பெழுந்த சுடர்வீ வேங்கை” யென்பதனாற் பெறுதும் “வேங்கை வீயுகு துறுகல் இரும்புலிக் குருளையின் தோன்றும்” (குறுந். 47) என்றும், “அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை, மாத்தகட் டொள்வீ தாய துறுகல், இரும்புலி வரிப்புறம் கடுக்கும்” (புற. 202) என்றும் சான்றோர் கூறுதல் காண்க. அக்களிற்றின் சினமிகுதி தோன்ற, “வாங்கிப் பிளந்து” என்றார். பிளந்த வேங்கைச் சினையைச் சென்னியிற் கொண்டு செல்லும் அக் களிறு தண்டேந்திச் செல்லும் போர் மறவரை நினைப்பித்தலின், “செல்படை மறவர் தண்டுடை வலத்தர் போரெதிர்ந் தாங்கு” என்றார். செல்படையென்று கொண்டு இடிபோல மின்னிப் புடைக்கும் படை யென்றும் கூறுவர். சேஎர், திரட்சி. களிறு பிளிறும் என்றதற்கு ஏற்ப உவமைக்கண் ஆரவாரித்தல் பெற்றாம். “உறுபுலி யுருவேய்ப்பப் பூத்த வேங்கையைக், கறுவுகொண்டதன் முதல் குத்திய மதயானை” (கலி. 38) எனப் பிறரும் கூறுதல் காண்க. “களிறு தன் சினத்தாற் செய்த செயலுக்கெல்லாம் வேங்கை காரணமாய் நின்றமையான், இதற்குச் சுடர்வீ வேங்கை என்று பெயராயிற்” றென்பர் பழையவுரைகாரர். “கைவல் லிளையர் கடவுட் பழிச்ச” அவர் குரலோசையைப் புலிக்குழுவின் குரலாகக் கருதி யானை வேங்கையைச் சிதைக்கலுற்ற தென்பாரு முளர். களிறு, ரல் செத்து, வேங்கைப் பூவுடைப் பெருஞ்சினைப் பிளந்து, சென்னி மிலைச்சி, மறவர் போரெதிர்ந் தாங்குப் பிளிறும் அத்தம் (14) என இயையும். |