14 - 16. மழைபெயல் .......... காண்குவந்திசினே. உரை : மழைபெயல் மாறிய - மழைபெய்தல் நீங்கினதால் ; கழை திரங்கு அத்தம் - மூங்கில்கள் பசையற் றுலர்ந்து போன வழிகள் ; ஒன்று இரண்டு அல பல கழிந்து - ஒன்று இரண்டன்றிப் பலவற்றைக் கடந்து ; திண் தேர் - திண்ணிய தேர்களையுடைய ; வசையில் நெடுந்தகை - குற்றமில்லாத நெடுந்தகையாகிய நின்னை ; காண்கு வந்திசின் - காண்டற்கு வந்தேன் எ - று. மழையின்மையால் மூங்கில்கள் பசையற்றுலர்ந்தவழி அவை காற்றால் தம்மில் இழைந்து தீப்பற்றி யெரிவதால், வழிகள் செல்லற் கரியவாதல் பற்றி, அருவழிகளை இவ்வாறு கூறினார். “கழைகாய்ந் துலறிய வறங்கூர் நீளிடை” (புறம். 370) என்று பிறரும் கூறுதல் காண்க. வந்திசின், இதன் தன்மைக்கண் வந்தது ; இஃது “ஏனையிடத்தொடுந் தகுநிலை யுடைய வென்மனார் புலவர்” என்பதனா லமைந்தது. “கண்ணும் படுமோ வென்றிசின் யானே” (நற். 61) எனப்பிறரும் தன்மைக்கண் வழங்குதல் காண்க. நெடுந்தகையை விளியாக்கினுமமையும். 17 - 27. தாவல்............தாளே. உரை : வஞ்சினம் தாவாது முடித்த ஒன்று மொழி மறவர் - தாம் கூறிய வஞ்சினம் தப்பாது முடித்த வாய்மையினையுடைய வீரர்; முரசுடைப் பெருஞ் சமத்து - முரசு முழங்குதலையுடைய பெரிய போரின்கண்; அரசுபடக் கடந்து - எதிர்த்த வேந்தர் பட்டழியுமாறு வஞ்சியாது பொருது; வெவ்வர் ஓச்சம் பெருக நட்பரசருடைய ஆக்கம் பெருகவும் ; தெவ்வர் இருந்தலை பகையரசருடைய பெரிய தலைகளை ; உலக்கை எறி மிளகின் இடித்து - உலக்கையால் இடிக்கப்பட்ட மிளகு போலத் தாம் ஏந்திய தோமரத்தால் இடித்து அழிக்கவும்; வைகு ஆர்ப்பு எழுந்த மைபடு பரப்பின் - இடையறாத முழக்க முண்டாகிய கரிய நிறத்தையுடைய கடல்போல; எடுத்தேறு ஏய கடிப்புடை வியன்கண் - எடுத்தெறிதலைத் தெரிவிக்கும் குறுந்தடியால் முழக்கப்படுகின்ற அகன்ற கண்ணையுடைய முரசு; வலம்படு சீர்த்தி - வெற்றியாலுண்டாகிய மிக்க புகழோடு ;ஒருங்குடன் இயைந்து ஒருங்கே கூடி முழங்க; வால் உளைக்கடும் பரிப் புரவி யூர்ந்த வெள்ளிய தலையாட்ட மணிந்த விரைந்த செலவினையுடைய குதிரையை யூர்ந்த நின்னுடைய ; படும் திரைப் பனிக் கடல் கால் உளைக் கடும் பிசிருடைய உழந்த நின் தாள் - ஒலிக்கின்ற அலைகளையுடைய குளிர்ந்த கடலிற் சென்று அவ் வலைகள் காற்றால் உளைந்து சிறு சிறு கடிய திவலைகளாக உடையுமாறு போருடற்றிய தாள்கள்; தாவல் உய்யுமோ - வருந்துதலினின்றும் நீங்குமோ, (வருந்தா தொழியுமோ) சொல்வாயாக எ - று. |