பக்கம் எண் :

234

வஞ்சினமாவது   “யான்   இன்னது    செய்யேனாயின்   இன்ன
குற்றமுடையே  னாகுக”  என்பது போலும்  நெடுமொழியாற் சூளுறவு
செய்வது;  “இன்னது  பிழைப்பின்  இதுவா  கியரெனத்,  துன்னருஞ்
சிறப்பின்   வஞ்சினம்”   (பொ.  79)  என்று  ஆசிரியர்  கூறுவதும்,
“இன்றினிது    நுகர்ந்தன   மாயின்   நாளை,   மண்புனை  யிஞ்சி
மதில்கடந்தல்லது,  உண்குவ  மல்லேம்  புகா”  (பதிற்.  58) என்றும்
“சிறுசொற்     சொல்லிய     சினங்கெழு    வேந்தரை.....ஒருங்ககப்
படேஎனாயின்  பொருந்திய, என்னிழல் வாழ்நர் சென்னிழற் காணாது,
கொடியன்எம்   மிறையெனக்  கண்ணீர்  பரப்பிக்,  குடிபழி  தூற்றும்
கோலேனாகுக .......புலவர்  பாடாது வரைக என் நிலவரை” (புறம். 72)
என்றும்,  “முறை  திரிந்து  மெலிகோல் செய்தே  னாகுக” (புறம். 71)
என்றும்,  “காதல்  கொள்ளாப்.  பல்லிருங்  கூந்தல்  மகளிர், ஒல்லா
முயக்கிடைக்  குழைகவென்தாரே”  (புறம்.  73)  என்றும்  சான்றோர்
கூறுவதும்    வஞ்சினத்துக்கு    இலக்கணமும்   இலக்கியங்களுமாம்.
வஞ்சினம்  தப்ப வரின் உயிர் துறப்பரேயன்றி, வீரர் அச் சொல்லைத்
தவறாராதலின்,  அவரை  “ஒன்று  மொழி  மறவர்”  என்றார் ; இனி
தமக்குத்  தலைவராயினார் ஏற்கும் மேற்கோளே தமக்கும் உரித்தாகக்
கொண்டு அவர்  வழியொன்றி யொழுகும் இயல்புபற்றி, ஒன்று மொழி
மறவர்  எனச்  சிறப்பித்தா ரென்றுமாம். அரசர் போரிடைச் செய்யும்
வஞ்சினம்  பகைவரைப் புறங்காண்டலும், அவர் திருநாடு கைப்பற்றிக்
கோடலும்  கருதி  நிற்றல்பற்றி,  “வஞ்சினம்  முடித்தல்  -  மாற்றார்
மண்டலங்களைக்   கொண்டு   முடித்தல்”  என்று  பழையவுரைகாரர்
கூறுவர்.  பெரும் போர் நிகழுமிடத்து வீரர்க்கு மறம் கிளர்ந்தெழுவது
குறித்து   முரசு  முழக்குபவாதலின்,  “முரசுடைப்  பெருஞ்  சமத்து”
என்றார். “முரசுடைப்  பெருஞ்சமம் ததைய வார்ப்பெழ,  அரைசுபடக்
கெடுக்கும் ஆற்றல்” (பதிற். 34) என்றும் பிறரும் கூறுதல் காண்க.
  

நன்மை   நன்னர் என வருதல் போல, வெம்மை வெவ்வர் என்று
வந்தது  என்பார்,  பழையவுரைகாரர், “வெம்மை யென்னும் பண்பிற்கு
வெவ்வரென்பதும்  ஒரு  வாய்பாடு”  என்பர்.  எனவே, போர்க்குரிய
மறத்தீயின்   வெம்மை  மிக  என்பது  அவர்  கருத்தாதலை  யறிக.
வேண்டற்  பொருட்டாய  வெம்மை  யென்னும் பண்படியாகப் பிறந்த
இவ்  வெவ்வ  ரென்னும்  பெயர்,  வெய்யர் என வரற்பாலது எதுகை
நோக்கி  வெவ்வ ரென  வந்தது  என்று கோடல் சீரிது. “யாவும் நனி
வெய்யள்” (குறுந். 51), “நீயும் வெய்யை” (அகம். 112) என்றும் வருதல்
காண்க.   வெவ்வர்,   வேண்டியவர்  என்னும்  பொருட்டாய் ஈண்டு
நட்பரசர்  மேற்று.  வெவ்வர் இருந்தலைக்கு மிளகு உவமம். தெவ்வர்
இருந்தலை  உலக்கையெறி  மிளகின்  இடித்து  என  மாறிக் கூட்டுக.
உவமத்துக்  கேற்பப்  பொருளிடத்துத்  தோமரம்  வருவிக்கப்பட்டது.
“தோமர வலத்தர்” (பதிற் . 54) என்றும், “தண்டுடை வலத்தர்” (பதிற்.
41) என்றும் வீரர் கூறப்படுதல் காண்க.
  

மைபடு பரப்புப்  போல,  கடிப்புடை   வியன்கண்,  சீர்த்தியுடன்,
இயைந்து   முழங்க   என   இயையும்   வியன்கண், ஆகுபெயரால்
முரசுக்காயிற்று.  சீர்த்தியுடன்  ஒருங்கியைந்து  முழங்க எனவே, இது
வெற்றி  முரசு என்றவாறாம்.இயைய வென்பது இயைந்தெனத்  திரிந்து
நின்றது.