கடலகத்தே செல்லும் கலங்களைத் தாக்கித் தீங்குசெய்து திரிந்த பகைவர்களை அக் கடலகத்தே சென்று வேற்படையா லெறிந்து வென்றழித்தா னாதலின், “பனிக்கட லுழந்த தாள்” என்றார் ; பிறாண்டும்,“கடலொ டுழந்த பனித்துறைப் பரதவ” (பதிற். 48) என்பர். கடல் காலுளைக் கடும்பிசிருடைய உழந்த தாளென இயைக்க. இதனாற் கூறியது, மைபடு பரப்புப் போல் எடுத்தேறு ஏவிய வியன் கண்ணையுடைய முரசு சீர்த்தியுடன் ஒருங்கு இயைந்து முழங்க, அவ்வெடுத்தேறு முழக்கங் கேட்ட ஒன்றுமொழி மறவர், பெருஞ் சமத்து அரசுபடக் கடந்து, வெவ்வர் ஓச்சம் பெருகவும், தெவ்வர் இருந்தலை யிடித்து அழிக்கவும், புரவி யூர்ந்த நின்னுடைய பனிக் கடல் பிசிருடைய உழந்த தாள் தாவல் உய்யுமோ உரைப்பாய் என்றவாறாயிற்று. எடுத்தேறு, முன்னேறிப் படையினை யெறிதல். முன்னேறியும் பக்கங்களில் ஒதுங்கியும் போருடற்ற வேண்டுதலின், அவற்றைப் படைவீரர் அனைவரும் ஒருமுகமாகச் செய்வது குறித்துத் தானைத் தலைவர் பணிக்கும் உரை அவ் வீரர் செவியிற் படாமையின், அதனை முரசு முழக்கால் அறிவிக்கும் இயல்பை, “எடுத்தேறேய கடிப்புடை வியன்கண்” என்றும், அம் முழக்கின் குறிப்புவழி யொழுகி வெற்றி பெறுதலால், வெற்றி முழக்கும் உட னெழுதலின், “வியன்கண் வலம்படு சீர்த்தி ஒருங்குட னியைந்து” என்றும் கூறினார். எடுத்தேறி யெறியும் குறிப்பு. முரசினை முழக்கும் கடிப்பினால் தெரிவிக்கப்படுவது பற்றி, “எடுத்தே றேய கடிப்பு” எனக் கடிப்பின்மே லேற்றினார் ; “எடுத்தே றேய கடிப்புடை யதிரும்” (பதிற் 84) எனப் பிறரும் கூறுதல் காண்க. கடிப்பு, முரசறையும் குறுந்தடி. ஆர்ப்பு இடையறாமை பற்றி, “வைகார்ப்பு” என்றார் ; “வைகுபுனல்” (அகம். 116) என்றாற்போல. மை, கருமை. இனிப் பழையவுரைகாரர், “வைகார்ப்பு, ஒருகாலும் இடையறாது தங்கின ஆரவாரம்” என்றும், “மைபடு பரப்பு, கடற்பரப்பு” என்றும், “காலுளை யென்றது, காற்றானேயுளைதலையுடைய வென்றவாறு ; உளைதல், விடுபடுதல்” என்றும் கூறுவர். வருத்தப் பொருட்டாய தா வென்னும் உரிச்சொல் தாவ லெனப் பெயராயிற்று. “தாவ லுய்யுமோ வென்றது,வருத்தத்தினின்று நீங்குமோ என்றவாறு” என்றும், “தாவென்னும் உரிச்சொல் தொழிற் பெயர்ப்பட்டுத் தாவலென நின்றது” என்றும் பழையவுரை கூறும். இதுகாறும் கூறியது, வசையில் நெடுந்தகை, இளையர் யாழ் பொறுப்ப, கைவல் இளையர் கலப்பையராய்க் கடவுட் பழிச்ச, அத்தம் ஒன்றிரண்டல, பல கழிந்து நின்னைக் காண்கு வந்திசின் ; எடுத்தே றேய கடிப்புடை வியன்கண் சீர்த்தியுடன் ஒருங்கியைந்து முழங்க, ஒன்று மொழி மறவர் சமத்தில், அரசுபடக் கடந்து, வெவ்வர் ஓச்சம் பெருகவும், தெவ்வர் இருந்தலை இடித் தழிக்கவும், புரவி யூர்ந்த நின்னுடைய பனிக்கடல் பிசிருடைய வுழந்த தாள் தாவ லுய்யுமோ, கூறுக என முடிக்க. “இதனாற் சொல்லியது ; அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று. நின் கடலுழந்த தாள் தாவ லுய்யுமோ வென்றதனாற் காட்சி வாழ்த்தாயிற்று.” |