பாய்ந்து மூழ்கி மேலே யெழுகின்ற காலத்து அதன் வாயலகை யொப்ப; நெடுவள்ளூசி - மார்பிற் புண்களைத் தைக்குங் காலத்து அப்புண்ணின் குருதியிலே மூழ்கி மறைந்தெழுகின்ற நெடிய வெண்மையான வூசியினாலாகிய ; நெடுவசி - நீண்ட தழும்பும்; பரந்த வடுவாழ் மார்பின் - பரந்த வடுவும் பொருந்திய மார்பினையும்; அம்பு சேர் உடம்பினர் நேர்ந்தோர் அல்லது - அம்புகளால் புண்பட்டவுடம்பினையுமுடையராய்ப் பொர வந்தாரோடு தும்பை சூடிப் பொருவதல்லது அன்னரல்லாத பிறருடன் ; தும்பை சூடாது மலைந்த மாட்சி - தும்பை சூடாமல் புறக்கணித்துப் போய்ப் போருடற்றும் போர்மாட்சியு முடையராகிய; அன்னோர் பெரும - அத்தகைய தூய சான்றோர்க்குத் தலைவனே; நன்னுதல் கணவ - நல்ல நெற்றியையுடைய இளங்கோ வேண்மாட்குக் கணவனே ; அண்ணல் யானை அடுபோர்க் குட்டுவ - பெரிய யானைகளையும் வெல்லுகின்ற போரையு முடைய செங்குட்டுவனே எ - று. புடையலும் கழலும் மாட்சியு முடைய அன்னோர் என இயைக்க. வசியும் வடுவும் வாழ்கின்ற மார்பினையும் உடம்பினையு முடையராய் நேர்ந்தோர் என இயையும். புடையல், மாலை. ஈகை, பொன். “ஈகை வான் கழல்” (பதிற். 38) என்று பிறரும் கூறுதல் காண்க. “ஈகையங் கழற்கால் இரும்பனம் புடையல்” (புறம். 99) என ஒளவையார் கூறுவர். மீன் பிடிக்கும் சிச்சிலிப் பறவை தன் அலகைக் கீழ் நாட்டிக்கொண்டு நீர்க்குட் பாய்ந்து மூழ்கி மறைந்து அலகை மேனோக்கி நிறுத்தி வெளியேறுவது, வீரர் மார்பிற் கிழிந்த புண்ணைத் தைக்கும் ஊசிக்கு உவமம். இது வடிவும் தொழில் விரைவும் பற்றியதென்க. வசி, தழும்பு ; வடு, புண் ஆறியதனால் உண்டாயது. உடம்பினர் ; முற்றெச்சம். நேர்ந்தோரல்லது எதிர்மறை வாய்பாட்டாற் கூறியது. விழுப்புண் பட்டாரோடன்றிப் பிறரொடு பொரற்கு விரும்பாத மறமிகுதியை யாப்புறுத்தற்கு. தும்பை சூடாத மாட்சி யென்னாது, தும்பை சூடாது மலைந்த மாட்சி யென்றதனால், விழுப்புண் பட்டாரோடு பொருவதன்றிப் பிறர் எதிர்ந்த வழி வீறின்றெனத் தும்பை சூடாது, அவரைப் புறக்கணித் தொதுக்கி, ஒத்தாரொடு பொருத சிறப்புத் தோன்ற, “மலைந்த மாட்சி அன்னோர்” என்றார். அம்பு : ஆகுபெயர். இனிப் பழைய வுரைகாரர், “கயம் மூழ்கிச் சிரல் பெயர்ந்தன்ன நெடு வெள்ளூசி யென்றது, கயத்திலே மூழ்கிச் சிரல் எழுகின்ற காலத்து அதன் வாயலகை யொக்கப் புண்களை இழை கொள்கின்ற காலத்து அப்புண்ணின் உதிரத்திலே மறைந்தெழுகின்ற வூசியென்றவாறு” என்றும், “இனி நெடுவெள்ளூசியை நெட்டை யென்பதோர் கருவி யென்பாருமுள” ரென்றும், “அம்புசேர் உடம்பினர்ச் சேர்ந்தோரல்லது தும்பை சூடாது மலைந்த மாட்சியென்றது, அரசன் வீரரில் அம்புசேர் உடம்பினாராய்த் தம்மோடு வீரமொத்தாரோ டல்லாது போர் குறித்தார் தம்மோடு தும்பை சூடாமல் மாறுபட்ட மாட்சியை யுடையவ ரென்றவா” றென்றும் கூறுவர். இவ்வாறு கூறற்குக் காரணம், “அம்புசே ருடம்பினர்ச் சேர்ந்தோ” ரென்று பாடங் கொண்டதென அறிக. செங்குட்டுவன் மனைவியை இளங்கோவடிகள் |