பக்கம் எண் :

239

விரவித்      தொடுத்த     மாலையினைப்     பூட்டி,    அவ்வாறு
பயன்கோடற்குச்  சாந்தும் புறத்தெறிந்த என்றவாறு, “என்பர்.  “தசும்பு
துளங்கிருக்கை   யென்றது   தன்   களிப்பு   மிகுதியால்   தன்னை
யுண்டாருடல்     போல     அத்தசும்பிருந்து       ஆடும்படியான
இருப்பென்றவாறு”   என்றும்,   “இச்  சிறப்பான்  இதற்குத்   தசும்பு
துளங்கிருக்கை  யென்று  பெயராயிற்று” என்றும் பழையவுரை  கூறும்.
கள்  நிரம்பிய  குடங்கள்  களிப்பேறிய  வழி  அசைவதும்  சீறுவதும்
உண்டென்றும்,      அசையுங்கால்       இருக்கையி       னின்று
உருண்டொழியாமைப்    பொருட்டு     இருக்கைகளும்  அதற்கேற்ப
அமைந்திருக்குமென்றும்,  கள்  விற்போரும்  உண்போரும்   கூறுவர்.
மட்டு,  கள்; அது மட்டமென வந்தது. கள்ளின் தெளிவு  நீலமணியின்
நிறம்  பெறுதலால், “மணி  நிற  மட்டம்” எனப்பட்டது. பெரி துண்டு
மகிழ்   சிறக்குமளவு  கள்ளினை  வழங்கியது  தோன்ற,  “வண்மகிழ்
சுரந்து”    என்றும்,    ஈத்துவக்கும்    பேரின்பத்தால்   தனக்கென
வோம்பாமை கண்டு, “ஓம்பா வீகையின்” என்றும் கூறினார். இவ்வாறே
அதியமான்    ஓம்பாவீகையின்    வண்மகிழ்   சுரந்த   செய்தியை,
ஒளவையார்,   “சிறியகட்  பெறினே  யெமக்கீயு  மன்னே,  பெரியகட்
பெறினே,  யாம்பாடத்  தான்மகிழ்ந்  துண்ணு  மன்னே” (புறம். 235)
என்று கூறுதல் காண்க.
  

இனி, மணிநிற மட்டத்தை நல்குவதோ டமையாது வளவிய செல்வம்
தந்து   மகிழ்  சுரந்து,  கோடியர்  கிளை  வாழக்  கலிமாப்  பொழிந்
தானென்   றுரைத்தலு   மொன்று.   இது   பழைய  வுரைகாரர்க்கும்
கருத்தாதலை, “மட்டத்தினையும்   வளவிய  மகிழ்ச்சியினையும் சுரந்து
என இரண்டாக வுரைத்தலுமாம்” என்பதனா லறிக.
  

இனி,   செங்குட்வன்  தன்  வீரர்க்கு  வலமும், பொருநர் பாணர்
முதலாயினார்க்கு   மணிநிற   மட்டமும்,   கோடியர்க்குக் கலிமாவும்
வழங்கினானென்று உரைப்பினு மமையும்.
  

16 - 23. மன்பதை மருள..............................பலவே.  

உரை :  மன்பதை  மருள அரசு படக் கடந்து - காணும்  மக்கள்
வியப்பெய்தும் வண்ணம் பகையரசரை வென்றமையின் ;  முந்துவினை
எதிர்வரப்  பெறுதல்  காணியர்  - முன்னேறிச் செய்யும் போர்வினை
இல்லாமையால்  அஃது  எதிர்வரப் பெறுவதை விழைந்தவராய் ; நின்
தேரொடு சுற்றம் - நின் தேர் வீரரும் ஏனை வீரரும் ; உலகுடன் மூய
-  நிலமெல்லாம் பரந்து நெருங்கி நிற்ப ; ஒளிறு நிலை உயர் மருப்பு
ஏந்திய  களி  றூர்ந்து  - விளங்குகின்ற நிலையினையுடைய உயர்ந்த
மருப்புக்களையேந்திய  யானை  மேல்  இவர்ந்து  செல்லும்  ; மான
மைந்தரொடு  மன்னர் ஏத்த மானமுடைய வீரரும் வேந்தரும் அஞ்சி
ஏத்திப்  பாராட்ட  ; மாயிருந்தெண்  கடல் - பெரிய கரிய தெளிந்த
கடலினது   ;   மலி  திரைப்  பௌவத்து  மிக்க திரைகளையுடைய
நீர்ப்பரப்பிலே  ;  வெண்தலைக்  குரூஉப்பிசிர்  உடைய - வெள்ளிய
நுரையாகிய தலை நிறம் பொருந்திய சிறு சிறு திவலைகளாக வுடைந்து
கெட  ;  தண்  பல வரூஉம் - தண்ணிய பலவாய் மேன்மேல்வரும் ;
புணரியிற் பல அலைகளினும் பலவாகும் எ - று.