டுரைப்பர் என்றுமாம்” (பக். 351-2) என மற்றோருரையினையும் குறித்துள்ளமை இவண் கருதத் தகுவதொன்றாம். சேரமான் பெருஞ்சேரலிரும்பொறையின் உயர்வற வுயர்ந்த தலைமைப்பண்பினை எடுத்துரைக்க விரும்பிய அரிசில்கிழார், அவ் வேந்தர் பெருமான் அறிவிற்சிறந்த சான்றோராலும் நிரம்பிய கல்வியில்லாத ஏனை மக்களாலும் நன்கறியப்பட்ட பெருமையுடையான் என விளக்குவார். “உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும் பிறர்க்கு நீ வாயி னல்லது பிறர் உவமமாகா ஒருபெரு வேந்தே” என, அம் மன்னனை முன்னிலையாக்கிப் போற்றினார். உண்மையாகவே ஒருவன் யாவராலும் பாராட்டத்தகும் சிறப்புடையவனாக விளங்குவானானால் அவனது பெருமை உலகிலுள்ள கற்றார் கல்லாதார் ஆகிய எல்லா மக்களுக்கும் நன்கு புலனாதல் வேண்டும். ஞாயிற்றால் மக்களுக்கு விளையும் நன்மை அதன் இயல்பினை நன்கு ஆராய்ந்துணரும் அறிவியல் நூலோருக்கும் நிரம்பிய கல்வியில்லாத ஏனைமக்களுக்கும் ஒப்ப விளங்குதலைக் காணுகின்றோம். அதுபோலவே உலகில் அறிவாற்றல் முதலியவற்றால் சிறந்து விளங்கும் பெரியோனொருவனது பெருமை யாவருள்ளத்திலும் நிலைபெற்றிருக்குமென்பது பெறுதும். “ஆற்றலுடையார்க்கு எடுத்துக்காட்டுதற்குரிய உவமையினைப் பேரறிஞர் ஆராய்ந்து தேடினாலும் ஏனைமக்கள் ஆராய்ந்து தேடினாலும் நின்னையே உவமையாக எடுத்துக் கூறுவதல்லது நினக்குப் பிறரை உவமையாக எடுத்துக்காட்ட இயலாதபடி உயர்வற விளங்கும் பெருமானே” என அரிசில்கிழார் பெருஞ்சேரலிரும்பொறையின் தனக்குவமையில்லாத தகைமையை நன்கு விளக்கினார். இங்ஙனம் பொருள் கூறுங்கால் ‘உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும்’ என்பதன்கண் எண்ணுதற்கு வினைமுதல் உரவோரும் மடவோரும் எனக் கொள்ளுதல் வேண்டும். இங்ஙனமே விரிவுரையிற் காணப்படும் பொருட்சிறப்பினையெல்லாம் விரித்தெழுதப் புகின் பெருகுமென்றஞ்சி இவ்வளவில் அமைகின்றேன். கற்றோர் உள்ளத்தைக் கவரவல்ல பதிற்றுப்பத்து என்னும் விழுமிய நூலுக்கு இங்ஙனம் சுவைநலங் கெழும விரிவுரையெழுதி யுதவிய திரு. ஒளவை. சு. துரைசாமிப்பிள்ளை யவர்களைத் தமிழகம் நன்குணரும். ஆங்கிலப் பயிற்சியுடன் நிரம்பிய தமிழ்நூற் புலமையும் பண்டைத் தமிழிலக்கியச் சுவை நலன்களை உரை வாயிலாகவும் சொற்பொழிவு வாயிலாகவும் யாவரும் உணரச் செய்தல் வேண்டுமென்னும் |