பக்கம் எண் :

240

முந்து  வினை யெதிர் வரப்  பெறுதல் காணியர் தேரொடு சுற்றம்
உலகுடன்   மூய,   அதுகண்டு,  களிறூர்ந்து  செல்லும் மைந்தரொடு
மன்னர்  அஞ்சி  ஏத்த,  நீ  பிறக்கோட்டிய  தெண்கடல் பௌவத்து,
பிசிருடைய, வரூஉம் புணரியினும் பலவாம் என இயைத்து முடிக்க.
  

இதனாற் சொல்லியது, மன்பதை மருளப் பகையரசுகளை வஞ்சியாது
பொருது  வெல்லும்  மாண்பினால்,  போர்  பெறுவது இல்லாமையால்,
அது  பெறுதற்கு  நின் படைவீரர் நாடெங்கும் பரந்து நெருங்க, அவர்
கருத்தறிந்  தஞ்சும்  வேந்தரும் பிறரும் நின் அருள் நாடி யேத்த,  நீ
வேற்படை  கொண்டு  கடல்பிறக் கோட்டினை யென்றும், நீ வழங்கிய
மாக்களை  யெண்ணின்  அவை  அக் கடலிடத் தலையினும் பலவாம்
என்றும் கூறியவாறாம்.
  

தன்னொடு  பொர  வந்த  வேந்தர்  செய்யும் சூழ்ச்சி யனைத்தும்
நுனித்தறிந்து  அற நெறியே  நின்று போருடற்றி வென்றி யெய்துவது
காணின்  மக்கட்கு வியப்புண்டாதல் இயல்பாதலால், “மன்பதை மருள
அரசுபடக் கடந்து” என்றார். கடந்து என்னும் வினையெச்சம் காரணப்
பொருட்டு. வேந்தன் கடலிற் போர் செய்வான் சென்றானாக நிலத்தே
நின்ற  வீரர்,  அற்றமறிந்து  பகையரசர்  தாக்காமைக் காப்பார் நாடு
முற்றும்  நெருங்கிப்  பரந்தவர், போர்  பெறாமையால் வெறிகொண்டு
அதனை நாடுவாராய்க் காணப்பட்டமையின், முந்துவினை யெதிர்வரப்
பெறுதல்  காணியர் தேரொடு  சுற்றம் உலகுடன் மூய” என்றார். மூய,
நெருங்க.
  

உயர்ந்த    களிறூர்ந்து  செல்லும் செல்வமும் பெருமையுமுடைய
வீரமைந்தரும்   சிற்றரசரும்  குட்டுவனது  ஆண்மையும்  வெற்றியும்
வியந்து  பாராட்டுவது  தோன்ற,  “மான மைந்தரொடு மன்ன ரேத்த”
என்றார்.  பிறர்பால் காணப்படும் ஆண்மை முதலிய நலங்கண்டவழிப்
பாராட்டுவது   மானமுடைய   மக்கட்கு   மாண்பாதல்பற்றி,  “மான
மைந்தரொடு மன்னர்” எனச் சிறப்பித்துரைத்தார் என அறிக.
  

வில்லும்   வாளும் வேலும் கொண்டு பொரும் காலாட்களில் பலர்
வேந்தனுடன்  கடலிற்  சேறலால்,  ஏனைத்  தேர்,  யானை,  குதிரை
முதலிய  படை செலுத்தும் வீரர், நாடுகாத்தலில் ஈடுபட்டமை தோன்ற,
“தேரொடு சுற்றம் உலகுடன் மூய” என்றார்.
  

ஏத்த,  மூய  என  நின்ற  வினையெச்சங்களை  நீ பிறக்கோட்டிய
என  ஒருசொல்  வருவித்து முடிக்க.
  

இனி,   அரசுபடக்  கடந்து  என்புழி,  அரசு, கடலகத்தே யிருந்து
கொண்டு குறும்பு செய்த பகையரச ரென்றும், அவரை வென்று மீளும்
செய்தியை,   “முந்து   வினை”   யென்றும்,   அக்காலை  அவனை
யெதிர்கொள்ளும்  பொருட்டுக் கடற்கரைக்கண் வந்திருந்த வேந்தரும்
மைந்தரும்  ஏத்த,  அவனோடு ஒப்பத் தேரேறி யுடன்வரும் அரசியற்
சுற்றத்தாரும்   ஏனைச்  சான்றோரும்  மொய்த்து  நின்றதை  “மூய”
என்றும்   கூறுலுமாம்.   இவ்வாறு   கூறுமிடத்து   மூய   வென்பது
பெயரெச்சம். உலகு, சான்றோர் மேற்று.
  

பௌவம்,    ஈண்டு  நீர்ப்பரப்பின்மேற்று,  பலவாய்   நெருங்கித்
திரைத்து வருதலின், நுரை பிசிராக வுடைவது தோன்ற, “வெண்டலைக்
குரூஉப்பிசிருடைய” என்றார். புணரி, அலைகள்.