“குன்று வறம் கூர” என்றும், அக்காலத்தே நிலம் புலரக் காற்றும் வெப்பமுற்று வெயிலின் வெம்மையை நன்கு புலப்படுத்தலின், “சுடர் சினம் திகழ” என்றும் கூறினார். வெப்ப மிகுதியைச் சினமென்றது இலக்கணை ; குன்று வறம் கூர்ந்த வழி, அருவிகள் நீரற்றொழிதலால், “அருவியற்ற பெருவறற் காலையும்” என்றார். இக் காலத்தே பெருஞ் "செல்வமுடையாரும் கொடை புரிதற்குப் பின்னிடுவரென்பது படநிற்றலின், உம்மை சிறப்பு. இக்காலத்தும் செங்குட்டுவன் ஓம்பா வீகையினை மேற்கொண்டிருந்ததனை இது வற்புறுத்தி நிற்றல் பின்வரும் கூற்றுக்களால் அறிக. இனிப் பழையவுரைகாரர், “பணை திரங்கும் வண்ணம் பெயலொளித்தலானும், குன்று வறங்கூரும் வண்ணம் சுடர்சினம் திகழ்கையானும் அருவியற்றவெனக் கூட்டி யுரைக்க” வென்பர். “கன்மிசை வேய்வாடக் கனைகதிர் தெறுதலால்” (கலி. 11) எனச் சான்றோர் கூறுதலால், பெயலொளித்தலும் சுடர் தினம் திகழ்தலும் என்ற இரண்டும் ஒருங்கே பெருவறற் காலைக்கு ஏதுவாய்க் கோடல் அமையு மென்க. எனினும், பெயலொளித்த வறற்காலையே சுடர்தினம் திகழ்தற்கும் இடமும் ஏதுவுமாதல் தெற்றென வறிக. “ஆர்கலி வானம் தளிசொரிந்தாங்கு” (18) என்பதை நோக்கின், பெயலொளித்த காலத்துப்புன்மையும், அது சிறந்து சொரிந்த காலத்து நன்மையும் எடுத்தோதுதலே ஆசிரியர் கருத்தாதலை யறிக. வானம் பொய்யாது மழை பெய்தவழி யுண்டாகும் நலங்களைக் கூறுவார், ஆறுகள் நீர் நிரம்பப் பெருகிக் கரைகளை யுடைத்து அலைத்துக்கொண்டோடுதலால் கடத்தலரிதாம் நிலைமையுண்டாதல் குறித்து, “அருஞ் செலற் பேராற் றிருங்கரை யுடைத்து” என்றார். பெரிய கரையினை யுடைத்தாயினும் பயனின்றென்றற்கு, “இருங்கரை” யென்று சிறப்பித்தார். அவ்யாண்டின் விளைவு குறித்து முதற்கட் பூட்டும் ஏராதல்பற்றி, “கடியேர் பூட்டுநர்” என்றார். இதனைப் பொன்னேர் பூட்டுதல் என்று இக்காலத்து வழங்குப. மழைக்காலத்தே கொன்றை மலருமாதலின், “கடுக்கை மலைய” என்றார். உடைத்து என்புழிச் செல்ல என ஒரு சொல் வருவித்து முடிக்க. இனிப் பழையவுரைகாரர், “அருஞ்செலற் பேர் ஆறு, புனல் நிறைந்த ஆறு ; யாறு ஆறென மருவிற்று” என்றும், “கரையை யுடைத்துத் தளிசொரிந்து தாங்கென உடைத்தற் றொழிலை வானத்தின் றொழிலாக்குக” என்றும், “இந்நீர் என ஒரு பெயர் வருவித்து உடைக்கவெனத் திரிக்கவுமாம்” என்றும், “சிலை முழங்கி யென்றது சிலைத்தலொடு முழங்கி யென்றவா” றென்றும் கூறுவர். பெயலொளிப்பதால், குன்று வறம் கூர, சுடர் சினம் திகழ, அருவியற்ற வறற்காலையிலும் வானம் பேராற் றிருங்கரை யுடைத்துச் செல்லவும், ஏர் பூட்டுநர் கடுக்கை மலையவும் முழங்கிப் பெயல் சிறந்து தளிசொரிந்தாங்கு என இயையும். இனி, பேராறு என்பதனை மலையாள நாட்டுப் பேராறெனக் கொண்டு, “அருஞ் செலற் பேராற் றிருங்கரை யுடைத்து” என்பதற்கு, “அரிய செலவையுடைய பேராற்றின் பெரிய கரையை யுடைத்து” என்று உரைத்து, “மழையில்லாமல் வறட்சி மிக்க காலத்தும் பேராறு நீரறாது பாயும் என்றபடி ; இவ்வியல்பு பிற நதிகள் பலவற்றிற்கும் இன்மையின் |