கொள்ளையாடுதலுயுடைய வீரர் ; கொல் களிறு பெறுக - கொல்கின்ற களிற்றியானைகளைப் பெறுக என்றும்; வென்றியே விரும்பும் இயல்புபற்றி “வென்றி மேவல்” என்றதற்கேற்ப வாகை மாலை சூடுப வென்பார், “துய்வீ வாகை” யினையும், பகைவரது முழுமுத லரணத்தை முற்றலும் கோடலும் செய்தல்பற்றி உருகெழு சிறப்பினை யுடையராதலால், “நுண்கொடி யுழிஞை” யினையும் எடுத்தோதினார். பிறாண்டும் “நுண்கொடி யுழிஞை” யினையும் (பதி்ற். 44) என்பர். “நெடுங்கொடி யுழிஞைப் பவரொடு மிலைந்து” (புறம். 77) என்று பிறரும் கூறுதலால் இவ் வுழிஞைக்கொடி நுண்ணிதாயும் நெடிது படர்வதாயுமிருத்தல் அறியப்படும். இதனுடைய இலை சிறியதாயிருக்குமென்பது, “சிறியிலை யுழிஞைத் தெரியல் சூடி” (பதிற். 63) என்பதனால் விளங்கும். வீரருள் உயர்ந்தோர் பொன்னால் உழிஞைப்பூச் செய்து மாலை தொடுத்தணிதலுமுண்டு ; “பொலங் கொடி யுழிஞையன்” (பதிற் . 56) என வருதல் காண்க. இனிப் பழையவுரைகாரர், “வாகை யுழிஞை யென்றது, வாகையும் முடிவிலே யுடைய உழிஞை யென்றவாறு” என்றும், “இனி வாகையும் உழிஞையுமென இரண்டாக்கலுமாம்” என்றும், “கொண்டி கொள்ளை” யென்றும் கூறுவர். கொண்டி பெறுதலை வீரர் விரும்புவதை “கொண்டியுண்டித் தொண்டையோர்” (பெரும். பாண. 445) எனச் சான்றோர் கூறுப. 26 - 29. மன்றம்..............யாகலின். உரை : கண்டி நுண் கோல் கொண்டு - கணுக்களையுடைய நுண்ணிய கோலை யேந்திக்கொண்டு ; மன்றம் படர்ந்து - ஊர் மன்றத்தேயிருந்து பாடுதற்குரிய தலைவன் புகழ்களை யெண்ணி ; மறுகு சிறை புக்கு - தெருக்களின் இருமருங்கும் சென்று ; களம் வாழ்த்தும் - தலைவன் பொருது வென்ற போர்க்களத்தை வாழ்த்திப்பாடும் ; அகலவன் மா பெறுக - பாணன் குதிரைகளைப் பெறுக ; என்றும் - என்றும் வழங்கும் கொடைத் தொழிலை விரும்பியிருப்பதே யன்றி ; இகல்வினை மேவலை யாகலின் - போர் வினையையும் ஒப்ப விரும்பி யிருக்கின்றா யாதலால். உண்ணப்படுவது உண்டி யென்றும், கொள்ளப்படுவது கொண்டியென்றும் வருதல்போலக் கண்கண்ணாகத் துண்டிக்கப்படுவது கண்டியென்று வந்தது. குலத்தோர் புகழெல்லாம் தொகுத்தெடுத்துப் பாடுவோர் அகவலர் என்ப. அவர் நுண்ணிய கோலேந்திக் கொண்டுவரும் இயல்பினராதலைப் பிறாண்டும், ஆசிரியர், “யாம விரவின் நெடுங்கடை நின்று, தேமுதிர் சிமையக் குன்றம் பாடும் நுண்கோ லகவுநர்” (அகம். 208) என்று கூறுதல் காண்க. இவர்கள் முதற்கண் ஊர்மன்றத்தை யடைந்து தலைவன் புகழ்களை யெல்லாம் தொகுத்துரைத்துப் பின்னர்த் தெருக்களிலும் இருமருங்கிலும் சென்று பாடுவரென்பது, தோன்ற, “மன்றம் படர்ந்து மறுகுசிறை புக்குக் களம் வாழ்த்தும் அகவலன்” என்றார். என்றும் என்பது |