பக்கம் எண் :

249

நிறீஇய    நல்லிசைத் தொலையாக் கற்ப” (பதிற். 80)  என்று  பிறரும்
கூறுதல்  காண்க.  இனி,  கற்பாவது,  கல்வி  கேள்விகளினால்  ஆய
செயற்கை  யறிவால்  உண்மை  யறிவு  தூய்மை  யெய்தப்  பிறக்கும்
மனத்திட்பம்  எனினுமாம்.  இனிப் பழையவுரைகாரர், “கற்ப வென்றது
கல்வியுடையாய் என்றவாறு ; பிறிதும் உரைப்ப” என்பர்.

31 - 36. நின்நிலை..........கலிமகிழானே.

உரை : வண்கை வேந்தே -வளவிய கொடையினையுடைய அரசே;
தூங்கு  கொள்ளை  முழவின் - தூங்கலோசைத்தாகிய பாட்டிற்கு ஏற்ப
முழங்கும்  முழவினையும்;  நிணம்  சுடு  புகையொடு  -  நிணத்தைச்
சுடுகின்ற  புகை  நாற்றத்துடன்;  கனல்  சினம்  தவிராது  நெருப்பின்
வெப்பம்   நீங்காமல்   ;  நிரம்பு  அகல்பு  அறியா  ஏறா    ஏணி-
நிரம்புதலும்     அகலுதலும்    இல்லாத    கோக்காலியின்    மேல்
வைக்கப்பட்டுள்ள  ;  நிறைந்து  நெடிது  இராத்  தசும்பின் - பெய்த
கள்ளால்  நிறைந்து  நெடிது  நேரம்  அந்நிறைவு குறையாதிருத்தலை
யறியாத  குடங்களிலிருக்கும்;  வயிரியர்  உண்டெனத் தவாஅ பாணர்
முதலாயினார்    உண்ட    வழியும்   குறையாத   ;   கள்ளின்  -
கள்ளினையுமுடைய  ;  நின் கலி மகிழான் - நின் திருவோலக்கத்தின்
கண்ணே ; நின் நிலை கண்டிகும் - நின் செல்வப் பெருமையெல்லாம்
கண்டேம் எ - று.
  

முழவினையும்     கள்ளினையுமுடைய கலிமகிழின்கண் நின் நிலை
கண்டிகும்   என   இயையும்   தூங்கலோசை,   மத்திம   சுருதியை
ஆதாரமாகவுடைய   இசை. “மந்த கதியையுடைய ஆடற்கேற்ற முழவு”
“ஈண்டுத்  தூங்கு கொளை முழவு” என்பதற்குப் பொருளாக வுரைப்பர்
பழையவுரைகாரர்.     கள்ளுண்பார்க்கு     நிணமும்    உடனுண்ண
வழங்குபவாதலின்,  அது  தோன்ற, “நிணங்சுடு புகையொடு”  என்றார்.
கட்குடம்   வைக்கும்  கோக்காலிக்கும்  ஏணியென்பது  பெயராதலின்,
அதனை  ஏனை  ஏணியின் வேறுபடுத்த  ஏறா ஏணியென்றார். “ஏறா
ஏணி  யென்றது  கோக்காலி”  யென்றும், “அதனை ஏறா ஏணியென்று
வெளிப்படுத்த  சிறப்பான்  இதற்கு  ஏறா  ஏணியென்று   பெயராயிற்”
றென்றும்    பழையவுரைகாரர்    கூறுவர்.    நிரம்புதல்,   முழுதும்
பொருந்துதல் ; அகலுதல், இடைவெளி மிக விரிதல.்  குடமிருக்குங்கால்
முழுதும்  நிரம்பியிராமல்  சிறிது  இடைவெளி  யுளதாகக்  கோக்காலி
அமைந்திருக்குமாறு   தோன்ற,   “நிரம்பகல்  பறியாத  ஏறா  ஏணி”
என்றார்.    இவ்வேறா   வேணிகள்   முன்னெல்லாம்    புகைவண்டி
நிலையங்களில்   வடிகட்டிய   தண்ணீர்   பொருட்டுக்  குடத்தோடே
நிறுத்தப்பட்டிருந்தமை   நினைவார்க்கு   “நிரம்பகல்  பறியா  வேறா
வேணி”  யின்  வடிவம் தெளிய விளங்கும்......இனி, நிரம்பகல் பறியாத
நிறைந்து  நெடிதிராத தசும்பு என இயைத்துரைப்பர்  பழையவுரைகாரர்.
நிரம்பகல்   பறியாத   குடம்  நிறைதல்  கூறுவது முரணாதலினாலும்
நாற்கோண     முக்கோண     வடிவினவாகிய       கோக்காலியில்
கோளவடிவிற்றாய   குடம்  இடை  வெளியின்றி  நிரம்பப்  பொருந்த
இராமை   தோன்றற்கு   “நிரம்பகல்   பறியா   வேணி”   யென்பது
கருத்தாதலினாலும் அவருரை பொருந்தாமையறிக.