பேரார்வத்தால் இடைவிடாதுழைக்கும் நன்முயற்சியும் இனிது வாய்க்கப்பெற்ற திரு. பிள்ளையவர்கள் தம் புலமைத்திறத்தால் தமிழகத்திற்குப் பெருந்தொண்டு செய்து வருகின்றார்கள். இவர்கள் பண்டைத் தமிழ்நூல்களுக்கு உரைகாணும் முறையிற் பெருந்தொண்டு புரிந்த உரையாசிரியர்களாகிய இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் முதலிய செந்தமிழ்ச் சான்றோர்களின் உரைத்திறங்களை யெல்லாம் நன்குணர்ந்து செறிவும் தெளிவும் அமைந்த இனிய செந்தமிழ்நடையில் பழந்தமிழ் நூல்களுக்கு விரிவுரை காணும் மேதகவுடையராய் விளங்குதல் இவர்களால் இயற்றப்பெற்ற இப்பதிற்றுப்பத்தின் விரிவுரையினால் நன்கு புலனாகின்றது. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய ஐங்குறு நூற்றுக்கு இன்சுவை கெழும இவர்களியற்றிய விரிவுரை தமிழறிஞர்களாற் பெரிதும் பாராட்டப்பெறும் சிறப்புடையதாகும். மணிமேகலைக்கு நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்கள் எழுதிய விரிவுரைப் பகுதியில் எஞ்சிய காதைகளுக்கு இவர்கள் இயற்றிய உரைப்பகுதி இவர்களது பரந்த நூற்பயிற்சிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. கேட்டார்ப் பிணிக்குந்தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழியுஞ் சொல்வன்மையும், செய்யுட்களின் திறனாய்ந்து தெளியும் இலக்கிய ஆராய்ச்சி முறையும், தொன்னூற் புலமையும் நன்கு நிரம்பப்பெற்ற திரு. ஒளவை.சு. துரைசாமிப் பிள்ளை யவர்கள் பதிற்றுப்பத்துக்குச் சிறந்ததொரு விரிவுரையினை இயற்றியுதவியது காலத்திற்கேற்ற தமிழ்த்தொண்டாகும். பண்டைத் தமிழ்நூற் பொருளை யெல்லாம் இக்காலத் தமிழ்மக்கள் நன்குணர்ந்து சிறந்த புலமைபெற்று விளங்குதல் வேண்டுமென்னும் பேரார்வத்துடன் அவற்றை அரிதின் முயன்று தேடி நன்முறையில் ஆராய்ந்து விளக்கந் தந்து அச்சிட்டுதவிய புலமைப் பெரியார், தென்கலைச் செல்வர், பெரும் பேராசிரியர் உ.வே.சாமிநாத ஐயரவர்கள்வார். அவர்கள் முதன் முதலாக இப் பதிற்றுப்பத்தினைப் பழைய வுரையுடன் வெளியிடாதிருந்தால் இத்தகைய புலமைச் செல்வத்தை நம்மனோர் எளிதிற்பெற்று மகிழ்தலியலாது. பதிற்றுப்பத்துக்குச் சிறந்ததொரு விரிவுரையினைப் பெற்றுமகிழும் இந்நிலையில்பெரும் பேராசிரியராகிய ஐயரவர்களின் செந்தமிழ்த் தொண்டினை நினைந்து உளமாரப் போற்றுதல் நம் கடனாகும். வாழ்க செந்தமிழ். வாழியர் தமிழ்த் தொண்டர்கள். |