துறை : செந்துறைப்பாடாண்பாட்டு. வண்ணமும் தூக்கும் அது. பெயர் : நோய்தபு நோன்றொடை. 1 - 7. நிலம்புடைப்பன்ன.......அண்ணல் உரை : நிலம்புடைப் பன்ன ஆர்ப்பொடு - நிலத்தை யிடிப்பது போன்ற முழக்கத்துடன் ; விசும்பு துடையூ - வானத்தைத் தடவுதற்கென; வான்தோய் வெல்கொடி - வானளாவ உயர்ந்த வெற்றிக்கொடி; தேர் மிசை நுடங்க - தேர்மீது நின்று அசைய; அமர் கடந்து பெற்ற - பல போர் களைச் செய்து பெற்ற பொருள்கள்; பெரிய வாயினும் - பெருமையுடைய வாயினும்; அரிய என்னாது - எளிதிற் பெறற்கு அரியவை என்று கருதாமல்; ஓம்பாது - தனக்கு வேண்டும் எனப் பேணிக்கொள்ளலும் செய்யாமல்; வீசி - பிறர்க்கு நிரம்பவும் நல்கி; கலம் செலச் சுரத்தல் அல்லது - இவ்வாறு பல்வகை அருங்கலங்களை மிகக் கொடுத்தலன்றி; கனவினும் களைக என வேண்டி யறியாத; கசடு இல் நெஞ்சத்து குற்றமில்லாத நெஞ்சினையும்; ஆடு நடை அண்ணல் - வெற்றியாற் பிறந்த பெருமித நடையினையுமுடைய அண்ணலே எ - று. போர் முரசின் முழக்கமும் வீரர் ஆரவாரமும் கலந்து நிலம் அதிர முழங்குமாறு தோன்ற, “நிலம்புடைப் பன்ன ஆர்ப்பொடு” என்றார். குளம்பினை யூன்றி விரைந்தேகும் குதிரையின் செலவையும் பிற சான்றோர், “நிலம்பிறக் கிடுவதுபோற் குளம்பு கடையூ” (புறம்.303) என்று கூறுப. ஆர்ப்பொடு அமர்கடந்து என இயைக்க. வானளாவிய கொடி ஆங்கு நுடங்கி யசையும் தோற்றத்தை, “விசும்பு துடையூ” என்றும், உயர்ச்சியை “வான்றோய் வெல் கொடி” யென்றும் சிறப்பித்தார். போரிற் பெற்றவை யென்னாது “அமர்கடந்து பெற்ற” என்றதனால், போரில் வஞ்சனையின்றி அறநெறியே நின்று பொருது எளிதாகப் பெற்றவை யென்பது பெற்றாம். “வென்றுகலந் தரீஇயர் வேண்டுபுலத் திறுத்து” (பதிற். 53) என்பவாதலின், பகைப்புலத்தே அரும் பொருள் பெறுமாறும், “நன்கலம் களிற்றொடு நண்ணா ரேந்தி, வந்து திறைகொடுத்து வணங்கினர் வழிமொழிந்து” (அகம். 124) என்பதனால் தோற்ற வேந்தர் பொருள் தருமாறும் காண்க. அமர் கடந்து பெற்றவை பெரியவாய் வழியும் ஈதல் அமையுமாயினும், அவற்றின் அருமை நோக்கியவழி அவற்றை யோம்புதற்கே உள்ளம் செல்லுமாதலின், அவ்வியல்பு செங்குடடுவன்பால் இல்லையென்றற்கு; “அரிய வென்னாது ஓம்பாது வீசிக் கலஞ்செலச் சுரத்தல் அல்லது” என்றார். பிறரும், “அரிய வெல்லாம் |