பக்கம் எண் :

252

எளிதினிற்     கொண்டு, உரிய வெல்லாமோம்பாது வீசி”   (மதுரைக்.
145-6)  என்றார். கலம், மார்பணி, ஆரம், கடகம் முதலியன. “மார்பிற்
பூண்ட  வயங்குகா  ழாரம்,  மடைசெறி முன்கைக் கடமொ டீத்தனன்”
(புறம். 150) என்று வன்பரணர் கூறுதல் காண்க.

இனி,     “கனவினும்  களைக  என    வறியா”    என்பதற்குக்
“கனவினிடத்தாயினும்   என்னுடைய   துன்பத்தை  நீக்குக  வென்று
கூறுதலை    யறியாத”   என்றுரைப்பாரு   முளர்.   தான்  பிறரால்
இரக்கப்படுவதல்லது  பிறரைத்  தான் இரத்தல் இன்மை  வேந்தர்க்குச்
சிறப்பெனக்   காக்கை   பாடினியார்   நச்செள்ளையார்,   “தடக்கை
இரப்போர்க்குக் கவிதலல்லதை யிரைஇய, மலர்பறியா வெனக் கேட்டிகு
மினியே” (பதிற். 52) என்று உரைப்பது ஈண்டு நோக்கற்பாலது.

10 - 17. நுண்கொடி யுழிஞை..............யுய்த்தோய்.   

உரை : நுண்கொடி யுழிஞை-நுண்ணிய  கொடியாகிய உழிஞையின்
பூவைச்  சூடிய  ;  வெல்போர்  அறுகை  -  வெல்லுகின்ற போரைச்
செய்யும்   அறுகை   யென்பான்;  சேணனாயினும்  -  சேணிடத்தே
இருந்தானாயினும்; கேள் என மொழிந்து - நண்பனென மேற்கொண்டு
பலருமறியச்  சொல்லி;  புலம்  பெயர்ந்து  -  பகைவனான  மோகூர்
மன்னனுக்கு  அஞ்சித்  தன் நாட்டினின்றும் நீங்கி யோடி; ஒளித்த -
ஒளித்துக்  கொண்டதனா  லுண்டாகிய  ;  களையாப்  பூசற்கு - நீக்க
முடியாத  பழிப்புரையின் பொருட்டு ; மோகூர் மன்னன் அரண்கள் -
அம்  மோகூர்  மன்னனுடைய அரண்களை ; அணங்கு  நிகழ்ந்தன்ன
தாவுறீஇ  - தெய்வத்தால் கேடு நிகழ்ந்தாற்போல வலியழித்து ; முரசம்
கொண்டு  - அவன் காவல் முரசைக் கைப்பற்றி ;நெடுமொழி பணித்து
-   அவன்   உரைத்த   வஞ்சினத்தைச்    சிதைத்துத்  தன்னையும்
பணிவித்து; அவன்  வேம்பு  முதல்  தடிந்து  - அவனுடைய  காவல்
மரமாகிய  வேம்பினையும் அடியோடு  வெட்டி  வீழ்த்து; முரசு  செய
முரச்சி - முரசு செய்தற்கேற்பச் சிறு துண்டங்களாகத்தறித்து ; ஒழுகை
களிறு பல பூட்டி யுய்த்தோய் - வண்டியிலேற்றி யானைகளை அதனை
யீர்க்கும் பகடுகளாகப் பூட்டிச் செலுத்தியவனே எ - று.

உழிஞை,     ஒருவகை  நுண்ணிதாய்  நெடிது  வளருங்  கொடி
“நெடுங்கொடி  யுழிஞைப் பவர்” (புறம். 76) என்று சான்றோர் கூறுதல்
காண்க.

உழிஞை     சூடிய அறுகை யென்பதனால், மோகூர்   மன்னனது
முழுமுத லரணம் முற்றி அதனைக் கோடல் குறித்துப்  போர்செய்வான்
சென்றமை  பெற்றாம்.  தான்  செய்த  பல  போர்களிலும் வெற்றியே
பெற்றுப்   போந்த   பெருமிதங்  காரணமாக  மோகூர்க்குச்  சென்று
உழிஞை  சூடி  முற்றுகையிட்டமை  தோன்ற, “வெல் போர் அறுகை”
யென்று சிறப்பித்தார்.