பாடினோர் வரலாறு பதிற்றுப்பத்தைப் பாடிய சான்றோர்களுள் முதற் பத்தையும் பத்தாம் பத்தையும் பாடினோர் ஒழிய, ஏனை இடைநின்ற எட்டுப்பத்துக்கட்கும் உரிய சான்றோர் எண்மர் பெயர்களும் கிடைத்துள்ளன. அவர்கள், முறையே குமட்டூர்க்கண்ணனார், பாலைக்கோதமனார், காப்பியாற்றுக் காப்பியனார், பரணர், காக்கை பாடினியார், நச்செள்ளையார், கபிலர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்கிழார் என்போராவர். இவர்கள் வரலாறு வருமாறு: குமட்டூர்க்கண்ணனார் : இவர் பெயரிலுள்ள குமட்டூர் என்பது இவரது ஊர். கண்ணனார் என்பது இவரது இயற்பெயர். இவர் இந் நூலின் இரண்டாம்பத்தின்கண் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடியுள்ளார். இமயவரம்பனைப் பாடி, உம்பற்காடு என்ற பகுதியில் ஐஞ்ஞூறு ஊர்களைப் பிரமதாயமாகவும், அவனது தென்னாட்டு வருவாயுள் பாகமும் பெற்றாரென இரண்டாம்பத்தின் பதிகம் கூறுகிறது. குமட்டூர் என்ற பெயரையுடைய வூர்கள் நம் நாட்டில் இப்போது காணப்படவில்லை. கல்வெட்டுக் காலங்களில் இருந்து பின் மறைந்துபோன வூர்கள் பல உண்டு. ஆதலால், அவற்றை நோக்குமிடத்துக் குமட்டூரெனப் பெயரிய வூர்கள் இரண்டு கல்வெட்டுக்களிற் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்று, குண்டூர் சில்லாவின் தலைநகரான குண்டூர். அங்குள்ள கல்வெட்டொன்று (A. R. No. 83 of 1971) அதனை, ஓங்கேரு மார்க்கத்திலுள்ள குமட்டூரு என்று குறிக்கிறது. அது சகம் 1080-ஆம் ஆண்டில் (கி. பி. 1158) தோன்றியதாகும். மற்றொன்று புதுக்கோட்டையைச் சேர்ந்த சித்தன்னவாசல் என்னுமிடத்திற் காணப்படும் கல்வெட்டு. இச் சித்தன்னவாசல் கல்வெட்டின் காலம் கி. மு. இரண்டாம் நூற்றாண்டாகவோமூன்றாம் நூற்றாண்டாகவோகல்வெட்டாராய்ச்சியாளர் கருதுகின்றனர். (P. S. Ins. No. 1). இஃது அசோகபிராமியெழுத்தாக எண்ணப்படுகிறது. தமிழ்த்தொடரொன்று அசோகபிராமியெழுத்தில் எழுதப்பட்டுள்ளதெனவும், இவ் வழக்காறு மதுரை திருநெல்வேலி சில்லாக்களில் வழங்கியதெனவும் எடுத்தோதி, இதனை அரிதின் முயன்று படித்துப் பொருள் உண்மை கண்ட கல்வெட்டுத் துறைத் தலைவர் திரு. K. V. சுப்பிரமணிய அய்யரவர்கள், இக் கல்வெட்டு, “யோமிநாட்டுக் குமட்டூர்” பிறந்தான் காவுதி யிதனுக்குச் சித்துப்போச்சில் |