இளையார் செய்த அதிட்டானம்” என நிற்கிறதெனவும், *கூறியுள்ளார். யோமிநாடு என்பது ஓய்மாநாடென்பதன் திரிபெனக் காணப்படவே, இக் கல்வெட்டு, “ஓய்மாநாட்டுக் குமட்டூர்ப் பிறந்தான் காவுதி யிதனுக்குச் சித்துப்போச்சில் இளையார் செய்த அதிட்டானம்” எனப் படிக்கப்படுவதாயிற்று. குண்டூர்க் கல்வெட்டையும் சித்தன்னவாசற் கல்வெட்டையும் நோக்குமிடத்துக் கண்ணனாரது குமட்டூர் ஓய்மாநாட்டுக் குமட்டூராமெனக் கருதுதற்கேற்ற வாய்ப்புடைத்தாகிறது. ஈதனுக்கு என்பது யாதனுக்கு என்பதன் பிராமியெழுத்தா லுண்டாகும் திரிபெனக் கொள்வதாயின், ஓய்மாநாட்டுக் குமட்டூர்ப் பிறந்தானான காவிதியாதனுக்கு, இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கோ, அவன் தந்தை உதியன்சேரலாதனுக்கோ, தானைத்தலைமை வகையிலோ வேறு வகையிலோ தொடர்பிருந்திருக்குமெனக் கோடற்கு இடமுண்டாகிறது. இவ்வகையில் ஓய்மாநாட்டுக் குமட்டூர் இரண்டாயிரமாண்டுகட்கு முன்பே விளங்கியிருந்த தொன்மைநல முடையதென்று தெளியலாம். இனி, ஓய்மாநாடென்பது தென்னார்க்காடு சில்லாவில் திண்டிவனம் தாலூகாவையும் செங்கற்பட்டுச் சில்லாவின் மதுராந்தகந் தாலூகாவின் தென்பகுதியையும் தன்கண் கொண்டு விளங்கிய தொன்மைநாடாகும். இந்த ஓய்மாநாடு இடைக்காலப் பல்லவ சோழ பாண்டியர் காலத்தேயுமன்றிச் சங்ககாலத்திலும் சிறப்புற்றிருந்த தென்பது, ஓய்மாநாட்டு நல்லியக்கோடனை இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் சிறுபாணாற்றுப்படை பாடிச் சிறப்பித்தலால் தெளிவாகிறது. இந்நாட்டிற் காணப்படும் ஊர்களுள் குமட்டூர் என்று பெரியதோர் ஊர் காணப்படவில்லை. ஆயினும் திண்டிவனத்துக்கு மேற்கில் முட்டூரென்றோர் ஊருளது. பண்டைய குமட்டூரே இப்போது முட்டூரெனச் சிதைந்து வழங்குவதாயிற்றெனக் கொள்ளின், இரண்டாம் பத்தைப் பாடிய குமட்டூர்க்கண்ணனார் தொண்டை நாட்டு ஓய்மாநாட்டைச் சேர்ந்த சான்றோர் என்பது தேற்றம். இவர்க்கு இமயவரம்பன் நல்கிய ஊர்களைப் பிரமதாயமெனப் பதிகம் கூறுதலால், அவற்றைப்பெற்ற கண்ணனார் பார்ப்பனமென்பது விளங்குகின்றது. இரண்டாம் பத்துக்குரிய நெடுஞ்சேரலாதன், இமயவரம்பனாய் விளங்கிய திறத்தை, “பேரிசை இமயம் தென்னங்குமரி யொடாயிடை, மன்மீக் கூறுநர் மறம்தபக் கடந்து” (பதிற். 11) என்று கூறி
|