28

வற்புறுத்துகின்றார்.    கடற்றீவு  ஒன்றிலிருந்து போந்து குறும்புசெய்து
வாழ்ந்த    கடம்பர்    என்பவர்களை,   நெடுஞ்சேரலாதன்   கலஞ்
செலுத்திச்சென்று  பொருது  அவர்களை வென்று மேம்பட்ட நலத்தை
முருகன்  கடலகம்  புகுந்து  சூரனை  வென்று  வாகைசூடி விளங்கிய
விளக்கத்தோடு  உவமித்துக்  கூறுவது  படிப்போர்க்கு  மிக்க இன்பம்
தருவதாகும்.  இமயவரம்பன்  மனைவியின் கற்பு நலத்தைப்  புகழ்ந்து,
“ஆறிய கற்பின் அடங்கிய சாயல், ஊடினும் இனிய கூறும்  இன்னகை,
அமிர்துபொதி  துவர்வாய்  அமர்த்த  நோக்கின்,  சுடர்நுதல்  அசை
நடை” எனவும், “பெருஞ்சால் பொடுங்கிய, நாணுமலி யாக்கை வாணுத
லரிவை”   யெனவும்  பாராட்டுவர்.  சேரலாதன்  கொடையை, “மாரி
பொய்க்குவ  தாயினும், சேரலாதன் பொய்யலன்” எனவும், “எமர்க்கும்
பிறர்க்கும்  யாவராயினும், பரிசின் மாக்கள் வல்லாராயினும், கொடைக்
கடனமர்ந்த  கோடா நெஞ்சினன்” எனவும், “எழிலிதலையா தாயினும்,
வயிறு  பசிகூர ஈயல” னெனவும் போற்றிப் புகழ்வர். இவையும் இவை
போல்வன  பிறவும்  இவருடைய  புலமை  நலத்தைப்  புலப்படுத்திக்
கற்போர்க்கு   அறிவின்பம்   நல்கும்   அமைதி   யுடையனவாகும்.
இவ்விரண்டாம்பத்தின் வேறாக இவர் பாடியனவாக வேறே பாட்டுக்கள்
கிடைத்தில.
  

பாலைக்கோதமனார்:  கோதமனார்  என்னும்  பெயரையுடைய இச்
சான்றோர்   பாலைத்திணையைச்  சிறப்பித்துப்  பாடும்   செந்தமிழ்ச்
சிறப்புடையராவர்.   ஆதலால்   இவர்   பாலைக்கோதமனார்  எனச்
சான்றோராற்  குறிக்கப்படுகின்றார்.  இவர்  இமயவரம்பன் தம்பியான
பல்யானைச்  செல்கெழு  குட்டுவனை  இந்நூலில் மூன்றாம் பத்தைப்
பாடிச்  சிறப்பித்திருக்கின்றார்.  இவ்வாறு  சிறப்பித்ததனால் வேந்தன்
மகி்ழ்ந்து   அவர்   வேண்டியதனை   வழங்கச்    சமைந்திருந்தான்.
அப்போழ்து,  அவர்  வேந்தனை  வேண்டி,  “யானும் என் சுற்றமும்
துறக்கம்  புகும்படி  பொருந்திய அறங்களை முடித்துத்  துறக்கத்தைத்
தருக”  என்றார். சேர வேந்தன் அவர் விரும்பிய வண்ணமே வேள்வி
பல   செய்து   நீ   விழையும்   துறக்கத்தின்கண்  நீடுவாழ்க”  என
வுதவினான்.  இச்செய்தியைப் பழமொழி  பாடிய  முன்றுறையரையனார்
குறிப்பாக  “  தொடுத்த  பெரும்புலவன்  சொற்குறை தீர, அடுத்துத்த
என்றாற்கு   வாழியரோ”   (பழ.  316)  என்றாராக,  அதன்  பழைய
வுரைகாரர்   இக்   கோதமனார்   வரலாறு  காட்டி  விளக்கியுள்ளார்.
கோதமனார்   ஒரு   பார்ப்பனர்   என்பது,   அவர்  யானும்  என்
பார்ப்பனியும் துறக்கம் புக வேண்டும் எனக் கூறினாரெனப்  படுவதால்
தெளிவாகிறது.    இவர்    பாடியதாகப்   புறத்தில்   ஒரு  பாட்டுக்
காணப்படுகிறது.  அதன்கண்  தருமபுத்திரனை  அவர் பாடினாரெனக்
குறிக்கப்பெற்றுளது.   பல்யானைச்   செல்கெழு  குட்டுவனை  அவர்
புறப்பாட்டில் அறவோன் மகனே எனப்