பக்கம் எண் :

280

இனிப்     பழையவுரைகாரர், “மார்பு பிணி மகளிரென்றது மார்பாற்
பிணிக்கப்பட்ட மகளி” ரென்றும், “முயக்கத்துப் பொழுதுகொள்  மரபின்
மென்பிணி  யென்றது முயக்கத்திலே இராப்பொழுதைப்  பயன்கொண்ட
முறைமையினையுடைய   மெல்லிய  வுறக்க”  மென்றும்,   “மென்பிணி
யென்றது புணர்ச்சி யவதிக்கண் அப்புணர்ச்சி யலையலான்  வந்த  சிறு
துயிலை” யென்றும், “கண்ணைப் பூவென்னும் நினைவினனாய்ப்  பிணி
யவிழவெனப் பூத்தொழிலாற் கூறினா” னென்றும் கூறுவர்.
  

இனி,     பொழுதுகொள் மரபு என்பதற்குக் காம வின்பத்துக்குரிய
இளமைப்பொழுதினைப்   பயன்கொண்ட  என்றுரைப்பினு   மமையும்.
நாளென ஒரு சொல் வருவிக்கப்பட்டது. கொல்களிறு என்பது கூன்.
  

சாந்துபுலர,    வண்ணம் நீவ, மகளிர் கூந்தல் மெல்லணை வதிந்து
மார்புகவர்    முயக்கத்துப்    பொழுதுகொள்   மரபின்   மென்பிணி
அவிழுமாறு நாள் பல எவன்கழியுமோ எனக் கூட்டி முடிக்க.
  

இக்கூற்று, குட்டுவனது மனத்திண்மையைக் கலக்குறுக்கும் நிலையில்
அமைந்திருக்கும் திறம் காண்க.
  

22 - 26. பன்னாள் ............ கண்ணே. 

உரை : பன்னாள் - பல நாட்கள் ; பாசறைமரீஇ -பாசறையிடத்தே
யிருத்தலால்;  கோடு முழங்கு இமிழிசை எடுப்பும் - சங்கு   முழங்கும்
முழக்கமும்  பிற  கருவிக  ளிசைக்கும் ஒலியும் எழுப்பும் ; பீடு கெழு
செல்வம் - பெருமை பொருந்திய போர் விளைக்கும் செல்வத்தின்கண்
;  மரீஇய  கண்  -  பொருந்திய  நின்  கண் ; பகை வெம்மையின் -
பகைவர்  பாலுண்டாகிய  சினமிகுதியால்;  பாடு அரிது இயைந்த  சிறு
துயில்  இயலாது  -  உறங்குதல்  அரிதாகப் பொருந்திய சிறு துயிலும்
செவ்வே கொண்டிலதாகலான் ; எ - று.
  

பன்னாள்   மரீஇ, செல்வம் மரீஇய கண் சிறுதுயில் இயலாதாகலான்,
எவன்  பல  கழியுமோ  எனக்  கூட்டி  வினை முடிபு கொள்க. மரீஇ
யென்னும்     செய்தெ     னெச்சம்    காரணப்        பொருட்டு;
பழையவுரைகாரரும்,  “பின்னின்ற  பன்னா  ளென்பதனைப்   பாசறை
மரீஇ  யென்பதனோடு  கூட்டுக” என்றும், “மரீஇ யென்பதனை மருவ
எனத்  திரித்து  மருவு  கையா  லென்க”  என்றும்  கூறுவர்.  கோடு
முழங்கும்  முழக்கமும்  பிற  இசைக்  கருவிகள் இசைக்கும்  ஓசையும்
கண்ணுறங்கா     வண்ணம்     முழங்குதலால்,    “கோடு    முழங்
கிமிழிசையெடுப்பவும்”  என்றார். ஏனைச் செல்வ வருவாயினும்  போர்
செய்து   பெறும்  செல்வத்தையே  அரசர்  புகழ்தரும்   செல்வமாகக்
கருதினமையின்,   “பீடு   கெழு  செல்வம்”  என்றும்,   பகைவர்பால்
இக்குட்டுவற்   குண்டாகிய   சின   மிகுதியால்,  அவரை  முற்றவும்
வேறற்கண்  அவனதுள்ளம்  வினைக்குரியவற்றைச் சூழ்ந்த  வண்ணம்
இருந்தமையின்,   சிறு   துயிலும்   இலதாயிற்   றென்றற்கு,  “பகை
வெம்மையின் பாடரிதியைந்த சிறு துயில் இயலாது” என்றும் கூறினார்.
சிறு  துயில்  என்புழிச்  சிறப்பும்மை  விகாரத்தால்  தொக்கது.  பாடு,
கண்படுதல்.