29

பாராட்டினாராக,     பிற்காலத்தோர்  அதனைத்  தருமபுத்திரன் என
வடமொழிப்படுத்திப்  பாண்டவனான தருமபுத்திரனைப்  பாடியதெனப்
பிறழக்  கொண்டுவிட்டனரெனக்  கோடல்  வேண்டும். இப்புறப்பாட்டு
இறுதியில் பாலைக்கோதமனார் பாடியதென்றே ஏட்டிற் காணப்படுகிறது.
ஆதலால்    மூன்றாம்    பத்தைப்   பாடிய   பாலைக்கோதமனாரே
இப்புறப்பாட்டையும்  பாடியவராதல்  தேற்றமாம்.  இவர்  பெயர்  சில
ஏடுகளில்   கோதமனாரெனக்   காணப்படுவது   கொண்டு  திரு. ரா.
இராகவையங்காரவர்கள்,    “இவ்வாசிரியன்    வேறாதல்  காட்டவே
பாலையென்னும்   அடையடுத்துப்   பாலைக்கௌதமனாரென   இவர்
பெயரே  புனைந்து  விளங்கிய பெரியாரும் இத் தமிழ்நாட்டில் உண்டு;
இப்  பாலைக்கௌதமனார்  இறப்பப் பிந்தியவராவர்” (தமிழ் வர. பக்.
245)   என்று   கூறுகின்றார்.   ஆனால்   டாக்டர்  திரு.  உ.  வே.
சாமிநாதையரவர்கள்,   பாலைக்கோதமனாரே  கோதமனாரெனச்  சில
ஏடுகளில்  குறிக்கப்  பெற்றனரெனவும், பதிற்றுப்பத்து மூன்றாம்பத்துப்
பாடியவரும்  “விழுக்கடிப்  பறைந்த”  (புறம். 366) எனத் தொடங்கும்
புறப்பாட்டைப் பாடியவரும் ஒருவரே யெனவும் கருதுகின்றார்.
  

இப் பாலைக்கோதமனார், பெருங்காஞ்சி பாடுவதில் சிறந்த நாநலம்
வாய்ந்தவரென்பதை  அவர்  பாடிய புறப்பாட்டு இனிது விளக்குகிறது.
பல்யானைச்   செல்கெழுகுட்டுவனைப்  பாராட்டுங்கால்  அவன் குடி
வரவினை, “பிறர் பிறர் நலியாது வேற்றுப்பொருள் வெஃகாது, மையில்
அறிவினர்   செவ்விதின்   நடந்து   தம்,   அமர்துணைப்  பிரியாது
பாத்துண்டு  மாக்கள்,  மூத்த  யாக்கையொடு பிணியின்று கழிய, ஊழி
யுய்த்த   வுரவோரும்பல்”  எனப்  பாராட்டி  யிருப்பதும்,  அவனை
வாழ்த்துமிடத்து,  அவன் மனைவியின் பெருமாண்பினை  விதந்தோதி,
“வேயுறழ்   பணைத்தோள்   இவளோடு,  ஆயிர  வெள்ளம் வாழிய
பலவே”   என   வாழ்த்துவதும்,   “சொற்பெயர்   நாட்டம் கேள்வி
நெஞ்சமென்,   றைந்துடன்   போற்றி”  யெனவும்,  “சினனே  காமங்
கழிகண்ணோட்டம்,   அச்சம்  பொய்ச்சொல்  அன்புமிக   வுடைமை,
தெறல்   கடுமையொடு  பிறவும்  இவ்வுலகத்து,  அறந்தெறி திகிரிக்கு
வழியடையாகும்   தீது”   எனவும்,  “ஓதல்  வேட்டல்  அவைபிறர்ச்
செய்தல்,  ஈத  லேற்றலென் றாறுபுரிந் தொழுகும், அறம்புரி யந்தணர்
வழிமொழிந்   தொழுகி,   யெனவும்   தொகுத்துக்  கூறும்  சிறப்பும்
பாலைக்கோதமனாருடைய   பரந்த   கேள்வி   சிறந்த  புலமையைப்
பாரித்துரைக்கும் பண்பினவாகும்.