ஊடுதல் “உடலினெ னல்லேன் பொய்யா துரைமோ” (ஐங். 66) என்றாற்போல. “கிழவோன் விளையாட்டாங்கு மற்றே” (தொல். கற்பு. 23) என்றதனால், அரசமா தேவி யூடற்கு அவன் விளையாட்டுக் காரணமாயிற்று. உய்வுதல், ஈண்டு அசைதல் மேற்று. ஊரல், பரத்தல்; “ஊரலவ்வா யுருத்த தித்தி, (அகம். 326) என வருதல் காண்க. அம்: அல்வழிச் சாரியை. தித்தி, தேமல், வரியுமாம் ; “நுணங்கெழில் ஒண் தித்தி” கலி. (60) என்பதன் உரைக்கண் நுண் தித்தி யென்றற்கு, “்ஒள்ளிய வரி” யென்று நச்சினார்க்கினியர் கூறுவர். கற்பும் காமமும் நற்பா லொழுக்கமும் முதலிய குண மாண்புகளெல்லாம் உடைமைபற்றி அரசியை, “பேரிய லரிவை” யென்றார். ஊடற்காலத்தும் உள்ளத்து வெகுளியை மறைத்துக் குளிர்ந்த நோக்கமே செய்தலின், “ஈரிதழ் மழைக் கண் பேரிய லரிவை” என்றார். சில வென்பதும் பன்மை யாயினும் சில விறந்தவற்றையே பலவென்னும் வழக்குப்பற்றி, இரண்டாதல் தோன்ற, “சில கிண்கிணி” யென்றும், மணிகளின் பன்மை தோன்றப் “பல் சில கிண்கிணி” யென்றும் சிறப்பித்தார். பரடு, அடியின் மேல்பக்கம் அதன்மீது காலைச் சூழ்ந்து கிடத்தலின், “பல்சில கிண்கிணி சிறுபர டலைப்ப” என்றார். கொங்கு வேளிரும், “பைம்பொற் கிண்கிணி பரட்டு மிசையார்க்கும், செந்தளிர்ச் சீறடி” (பெருங். 2, 3 : 82 - 6) என்றார். இதனால் விரைந்து நடத்தல் பெற்றாம் ; பெறவே, அரசியைச் சேரலாதன் மேலும் செல்லா வகை தடுத்தலும் அவன் வெகுளி சிறப்ப, அதனைக் காக்கும் வன்மையின்மையின் நுதல் வியர்ப்ப வுடல் நடுங்க நிற்றல் தோன்ற, “கொல் புனல் தளிரின் நடுங்குவனள் நின்று” என்றார். “தீயுறு தளிரின் நடுங்கி, யாவது மிலையான் செயற்குரி யதுவே” (குறுந். 383) எனச் சான்றோர் கூறுவர். ஒப்பனை செய்யப் பெற்ற செல்வமகளிர் காதில் அசோகின் தளிரணிந்து கையில் குவளை செங்கழுநீர் முதலிய பூக்களைப் பிடித்திருப்பது மரபு. ஈண்டு அரசமாதேவி கையில் செங்குவளைப் பூவை வைத்தி்ருந்தவள் புலவியெய்தியதும் அதனை அரசன்பால் எறியலுற்றாளென்பார், “நின் எறியரோக்கிய சிறுசெங் குவளை” என்றார். “ஒண் பூம் பிண்டி யொருகாது செரீஇ” (குறிஞ்சி. 119) என்றும், புலந்த மகளிர் பூக்களை யெறிதலை “குண்டல மிலங்கப் போந்து இனமலர் சிதறி யேகினாள்” (சீவக. 1026) என்றும், “தாள் நின்ற குவளைப் போதின் தாதகம் குழைய மோந்து” (சூளா. கல்யா.156) என்றும் சான்றோர் கூறுதல் காண்க. இனிக் கூந்தலில் அணிந்திருந்த செங்குவளை கொண்டு சேரலாதனை எறியலுற்றா ளென்றும் ; “குவளை நாளும் குவையிருங் கூந்தல்” (குறுந். 300) எனக் கூந்தலில் குவளையணியப்படுமாறு கூறப்படுதல் காண்க. செங்குவளை மிக்க மென்மை யுடைத்தாதலின், அது தம்மேற்படின் மெலிந்து சாம்புமென் றஞ்சி, சேரலாதன் அதனைத் தனக்கு ஈயுமாறு தன் இருகைகளையும் மலர்த்தி இரந்தா னென்பார், “ஈயென, இரப்பவும்” என்றார். தன்னுயர்ச்சி தோன்றக் கொடுவென்றாதல், தனது ஒத்த அன்புடைமை தோன்ற, தருக என்றாதல் கூறாது இழிந்தோர்க் குரிய சொல்லால் அவளை |