கொள்ளின், கழிசினத்துக்கு எளிதில் இடந் தரும் மெல்லிய வுள்ளமுடைய னென்றாகி நல்லோரது இகழ்பாட்டினைப் பெறுவிக்கு மாகலின், அச் சினத்தைத் தன் அறிவின் திண்மையால் தோன்றா வகையிற் கெடுத்து அன்புவழி நின்ற வல்லாண்மையை விதந்து “வல்லா யாயினை” யென்றா ரென வறிக. 27 - 31. பாஅல்................................எயிலே. உரை : அகல் இரு விசும்பில் - அகன்ற நீலவானத்தின் கண்ணே; பகல் இடம் தரீஇயர் - பகற்காலத்துக்கு இடமுண்டாதற் பொருட்டு; தெறு கதிர் திகழ் தரும் உரு கெழு ஞாயிற்று - சுடுகின்ற கதிர்களைப் பரப்பி விளங்கும் நிறம் பொருந்திய ஞாயிற்றினுடைய ; உருபு கிளர் வண்ணம் கொண்ட - உருவத்தையும் விளங்குகின்ற தன்மையையும் கொண்ட; வெண் குடை வேந்தர்தம் - வெண்கொற்றக் குடையையுடையை வேந்தர்களின் ; வான் தோய் எயில் - வான் அளாவ வுயர்ந்த மதில்களை ; பாஅல் யாங்கு வல்லுநையோ-உருத்து நோக்கிநின் பால் கவர்ந்துகொள்ள எவ்வாறு வல்லையாயினையோ; நின் கண்ணி வாழ்க - நின் கண்ணி வாழ்வதாக எ - று. ஞாயிற்று உருபு கிளர் வண்ணங்கொண்ட வேந்தர்தம் வான்றோய் எயில் பா அல் யாங்கு வல்லுநையோ, நின் கண்ணி வாழ்க என இயையும். அகலிரு விசும்பென்றற்கு, “தன்னை யொழிந்த நான்கு பூதமும் தன்னிடத்தே அகன்று விரிதற்குக் காரணமாகிய ஆகாயம்” என்றும், “அகலிரு விசும்பென்பது நோய்தீரு மருந்துபோல் நின்ற” தென்றும் கூறுவர் நச்சினார்க்கினியர் (பெரும்பா. 1) ஞாயிற்றின் தோற்றத்தால் உலகில் பகற்போது உண்டாதல் பற்றி, “பகலிடம் தரீஇயர் தெறு கதிர் திகழ்தரும் உருகெழு ஞாயிறு” என்றார். உரு, நிறம். ஏழுவகை நிறங்களும் ஒருங்கு கலந்தாகிய ஒண்ணிற முடைமையின், உருகெழு ஞாயிறென்றல் அமையு மென்க. உருபு, வடிவு, வண்ணம் ஈண்டுத் தன்மைமேற்று. அஃதாவது இருள் கடிந்து ஒளி பெருக்குதல.் உருபும் வண்ணமும் என எண்ணும்மை விரித்துக் கொள்க. கொண்ட வென்னும் பெயரெச்சத்தை வெண்குடையொடு முடிக்க. உருபும் வண்ணமும்கொண்ட குடை, வான்றோய் குடையென இயையும். பழையவுரைகாரர் வண்ணத்தைத் தன்மையென்றே கொண்டு, “வண்ணம் கொண்ட வேந்தரெனக் கூட்டி ஞாயிறுபோலக் கோபித்து எதிர்நின்ற வேந்தரென வுரைக்க” என்றும், உருவு கிளர் வண்ணம் என்றதற்கு “நிறம் விளங்கின தன்மை” என்றும் கூறுவர். ஒருகாலைக் கொருகால் தேய்தலும் வளர்தலுமின்றி எந்நாளும் ஒரு தன்மைத்தாய வடிவும் பகை கடிந்து புகழ்நாட்டும் கொற்றமும் விளங்க நிற்றல் பற்றி, “ஞாயிற்று உருபு கிளர் வண்ணம் கொண்ட வெண் குடை” யென்றார். தன் ஒளியும் வெம்மையும் நிலவும் பொருட்டு ஞாயிறு தன் தெறுகதிர் திகழ்தரும் என்றதனால், இவ்வேந்தரும் தம் ஒளியும் பொருமுரணும் |