30

காப்பியாற்றுக்காப்பியனார் :  இவர்  காப்பியாறு என்னும் ஊரினர்;
காப்பியன்  என்னும் பெயரினர். பண்டைக்காலத்தும் இடைக்காலத்தும்
நம்    தமிழகத்தில்    காப்பியன்   என்ற   பெயருடையார்   பலர்
இருந்துள்ளனர்.  காப்பியஞ்  சேந்தனார்,  தொல்காப்பியனார்,  எனப்
பண்டும், காப்பியன் ஆதித்தன் கண்டத்தடிகள் ( S.I.I.Vol. V. No.660)
என  இடைக்காலத்தும்  காணப்படுவது  காண்க. காப்பியன் என்போர்
பலர்   இருந்தமைபற்றி,  அவரின்  வேறுபடுத்தவே  இவர்  ஊரொடு
சேர்த்துக்  காப்பியாற்றுக்காப்பியனார்  எனச்  சான்றோர்  வழங்கினர்.
இக்   காப்பியாறு   என்னும்  ஊர்,  இன்ன  நாட்டில்  உள்ளதெனக்
காணமுடியவில்லை. காப்பியன் என்னும் பெயருடையார்  மழநாட்டைச்
சார்ந்த  பகுதிகளில்  காணப்படுவதால்,   இக்காப்பியாறென்னும்  ஊர்,
மழநாட்டிலோ  கொங்குநாட்டிலோ  இருந்திருக்கலாம்; தென்னார்க்காடு
வட்டத்து  விழுப்புரப்  பகுதியில் காப்பியாமூர் என்னுமோர்  ஊருளது;
அஃது  இப்போது  கப்பியாமூர்  என வழங்குகிறது. தஞ்சை வட்டத்து
மாயவரப்  பகுதியில்  காப்பியக்குடி  யென்றோர் ஊருளது  காப்பியஞ்
சேந்தனார்    எனப்படும்   சான்றோரொருவர்   நற்றிணை    பாடிய
ஆசிரியரிடையே   காணப்படுகின்றார்.  அவர்  இக்காப்பியனாருடைய
மகனாராவர்;    ஆனது    பற்றி   அவர்   காப்பியஞ்   சேந்தனார்
எனப்படுகின்றார்.    காப்பியாற்றுக்காப்பியனார்    களங்காய்க்கண்ணி
நார்முடிச்சேரல் என்னும் சேரவேந்தனை, இந்நூல் நான்காம்  பத்தைப்
பாடிச்   சிறப்பித்திருக்கின்றார்.  களங்காய்க்கண்ணி   நார்முடிச்சேரல்
காலத்தில்  அவனொடு  மாறுபட்டு நின்றவர் நெடுமிடலஞ்சி,  நன்னன்
முதலியோராவர்.  அவருள்  நன்னன், நார்முடிச் சேரல்  இளையனாய்
இருந்தபோதோ, அவனுடைய முன்னோர் காலத்தோ சேரநாட்டின் ஒரு
பகுதியைத் தான் கவர்ந்து கொண்டானாக, நார்முடிச்சேரல்  அரசுகட்டி
லேறியதும்   கடம்பின்   பெருவாயில்  என்னுமிடத்தே  நன்னனொடு
பொருது வென்றிகொண்டு விளங்கினான். அதனைக்கண்ட காப்பியனார்
“பொன்னங்   கண்ணிப்   பொலந்தேர்  நன்னன்,  சுடர்வீ  வாகைக்
கடிமுதல்   தடிந்த,   தார்மிகு   மைந்தின்  நார்முடிச்சேரல்”  என்று
பாராட்டியுள்ளார்.   நெடுமிட  லஞ்சியின்  வலிகெடப்  பொருதழித்து,
அவனது  “பிழையா  விளையுள் நாடகப் படுத்து” விளங்கினன்  எனச்
சிறப்பித்துள்ளார்.  நார்முடிச்சேரலின்  நார்முடி நலத்தை  “அலந்தலை
வேலத்    துலவை    யஞ்சினைச்,   சிலம்பி   கோலிய   விலங்கற்
போர்வையின்,  இலங்குமணி  மிடைந்த பசும்பொற் படலத்,  தவிரிழை
தைஇ  மின்னுமிழ்  பிலங்க, சீர்மிகு முத்தந் தைஇய நார்முடி”  யெனச்
சொல்லோவியஞ் செய்துகாட்டுகின்றார். அச் சேரலின் குணநலம்