துறை : செந்துறைப்பாடாண் பாட்டு. வண்ணமும் தூக்கும் அது. பெயர் : குண்டுகண் ணகழி. 1 - 5. வென்றுகலம் ......................... செல்குவையாயின். உரை : வென்று கலம் தரீஇயர் - பகைவரைப் பொருது வென்று அவருடைய செல்வங் களைக் கொணர்தற்காக; வேண்டுபுலத்து - அச் செயற்கு வேண்டும் இடத்தே ; இறுத்து - சென்று தங்குதலால் ; அவர் - அப் பகைவர்தாம் வெல்லுதலருமை நினைந்து ; எம் நல்கினை யாகுமதி என்று - யாம் இறுக்கும் இக் கலங்களை யேற்றுக் கொண்டு எம்மை அருளியோனாகுக என்று பணிந்த மொழியாற் சொல்லி ; வாடா யாணர் நாடு திறை கொடுப்ப - குன்றாத புது வருவாயினையுடைய தம் நாட்டிடத்தேயுள்ள அரிய செல்வமாகிய கலங்களைத் திறையாகச் செலுத்த ; அருளி - அவற்றை யேற்குமுகத்தால் அவர்கட்கும் நட்பருளி ; கல்பிறங்கு வைப்பின் - மலைகள் உயர்ந்த நாட்டகத்தே ; கடறு அரை யாத்த - காடு சூழ்ந்துள்ள ; நின் தொல்புகழ் மூதூர்ச் செல்குவையாயின்
1. அல்லதூஉம் என்றும் பாடம் |