நின்னுடைய பழைமையான புகழமைந்த தலைநகராகிய மூதூர்க்குத் திரும்பிச் செல்வாயாயின் எ - று. செல்வத்தாற் செருக்கித் திரியும் பகைவரை யொடுக்கி அவர் தரும் திறைப்பொருள் கோடலும் நன்கல முதலியவற்றைப் பரிசிலர்க்கு வழங்கலும் பண்டைத் தமிழ் வேந்தர் பொதுவாக மேற்கொண்டிருந்த செயல்களாதலின், அவற்றையே விதந்து, “வென்றுகலந்தரீஇயர்” என்றார். வென்று தரீஇயர் என்றதனால், இச்செலவு அடங்காத் தெவ்வர் மேற்றென்பதும், கலமென்று சிறப்பித்ததனால், பரிசிலர்க்கீத் துவக்கும் இன்பப்புகழ் குறிக்கோளென்பதும் பெற்றாம். “உறுவ ரார வோம்பா துண்டு, நகைவ ரார நன்கலம் சிதறி” (பதிற். 43) என்று பிறரும் கூறுதல் காண்க. சிறு முயற்சியால் பெருவெற்றி எய்துதற்குரிய இடங்கண்டபின்னல்லது வேந்தர் வினை தொடங் காராதலின், அத்தகைய இடங் கண்டு ஆங்கே தங்கினமை தோன்ற, “வேண்டு புலத்து இறுத்து” என்றார் . “யாண்டுதலைப் பெயர வேண்டுபுலத் திறுத்” (பதிற். 15) தென்று பிறசான்றோரும் இடத்தை வேண்டு புலமெனச் சிறப்பித்தோதுவர். நின் வலியும் படை வன்மையும் இடத்தின் வாய்ப்பும் பகைவர்க்குத் தம் மாட்டாமை புலப்படுத்துதலின், அவர் தாமே திறைகொடு போந்து பணிந்தமொழியால் நின் அருள் வேண்டுகின்றன ரென்பார், “நல்கினை யாகுமதி யெம்மென்று நாடுதிறை கொடுப்ப” என்றார். அவரை யழித்தல் குறித்து வெகுண்டு வந்தமை “நல்கினை யாகுமதி யெம்மென்று” மொழிந்து திறைகொடுத்தலாற் பெற்றாம் . மேன்மேலும் பெருகும் வளம் படைத்த நாடு என்றற்கு, “வாடா யாணர் நாடு” எனப்பட்டது. நாடு, ஆகுபெயரால் அந்நாட்டிடத்து அருங்கலம் எனக் கொள்க. இனி, நாட்டையே திறையாகக் கொடுப்ப என்றுமாம். இவ்வாறே பழைய வுரைகாரரும் கூறினர். இறுத்தவர் என்பதனைச் செயப்பாட்டு வினைப் பெயராக்கி, நின்னால் படையிறுக்கப்பட்டவ ரென்றுமாம். அவரென்றது, “அவ்வாறு இறுக்கும்படி நின்னொடு எதிர்ந்த அரச” ரென்றும், “திறைதர வென்றற்குத் திறை கொடுப்ப வென்றது இடவழுவமைதி” யென்றும் பழையவுரை கூறுகின்றது. மலைநிறைந்த நாடாதலால் “கல்பிறங்கு வைப்பின்” என்றும், அந்நாட்டையே தொன்றுதொட்டு வந்த அரசர் இருந்து ஆட்சிபுரிந்த மூதூர் என்றற்குத் “தொல்புகழ் மூதூர்” என்றும், அந்நகரை மலையரண் சூழ அதன் அடிப்பகுதியைக் காடுகொண்டு கட்டினாற்போலக் காடுசூழ்ந்து கிடத்தலால், “கடறு அரை யாத்த” என்றும் கூறினார். இவ்வாறே பகைவர் அனைவரையும் அழித்தும் பணிவித்துமல்லது திரும்பானாதலின், “செல்குவையாயின்” என்றார். இனி, செல்குவதாகவே கொண்டு, செல்கின்றா யாதலால் என்று உரைப்பினும் அமையும். 6 - 13. செம்பொறி ...........................யாவது . உரை : செம்பொறிச் சிலம்பொடு அணித்தழை தூங்கும் - (பகைவரைப் பாவைபோல் உருச் சமைத்து அதற்குச்) செவ்விய மூட்டுவா யமைந்த சிலம்பும் அணியாகத் தொடுக்கப்பட்ட தழை யுடையும் கட்டித் தொங்கவிட்டிருக்கும் ; எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில் - எந்திரப் பொறிகளும் எய்யப்படும் அம்பும் அமைக்கப்பட்ட |