வென்று முன்வந்த அடைச்சிறப்பான் இதற்குக் குண்டுகண்ணகழியென்று பெயராயிற்று” என்பர் பழையவுரைகாரர். புறத்தோரால் எளிதில் தகர்க்கப்படாமை குறித்து, மதிற்சுவர் வளைந்து வளைந்து செல்ல எடுக்கப்படுவதுபற்றி, “வளைந்துசெய்புரிசை” யென்றார். செய் யென்னும் முதனிலை வினையெச்சப் பொருட்டு. வளைந்து செய் வான்றோய் புரிசை என மாறிக் கூட்டியியைக்க. ஒன்னாத் தெவ்வர், மனம் ஒன்றாத பகைவர் என்க; ஒன்றாவெனற்பாலது ஒன்னாவென மரீஇயிற்று . இனி, ஒன்னாராகிய தெவ்வர் என்றுகொண்டு, “உயிரீறாகிய வுயர்திணைப் பெயரும், புள்ளியிறுதி யுயர்திணைப் பெயரும், எல்லா வழியும் இயல்பென மொழிப” (தொல். எழுத். 11) என்பதனுள் “இறுதி” யென்ற மிகையால் ஈறுகெட்டு மிக்கு முடியுமென அமைத்துக்கொள்க . முனை, போர் . இனி, வளைந்து செய் புரிசை யென்பதனை, “வளையச்செய் புரிசையெனத் திரித்துக் காலவழுவமைதியாகக் கொள்க” என்றும், “வளைந்து செய்புரிசையாகிய நின்னிற் றந்த மன்னெயில் என இருபெயரொட்டு” என்றும் கூறுவர் பழையவுரைகாரர். விலங்கித் தந்த எயில் என முடிக்க . இவ்வெயிலை வளைந்து செல்லுமாறு கூறுவார், அதற்கேற்ப, எயில் முகத்துப் படையினைப் படுத்தலால் வரும் கேட்டை நினைந்து, எயிற்கும் அவற்கும் உள்ள தொடர்பு சுட்டி, “நின்னிற் றந்த மன்னெயில்” என்றார். நின்னிற் றந்த மன்னெயிலென்றதற்கு, “நின்னாற் கொண்டு பிறர்க்குக் கொடுக்கப்பட்ட மன்னெயி:” லென்பர் பழையவுரைகாரர் . எனவே, நின்னால் தரப் பட்டதனால் நிலைபெற்ற எயில் என்பது அவர் கருத்தாயிற்று. மன், துணைவேந்தர் மேற்று. அவர் சேரலாதன் துணை பெற்று அவன் அருள்வழி வாழும் அரசராவர். அவர் சேரலாதனுடைய முன்னோர் காலத்திருந்தே வழிவழி அருளப்பட்டமை தோன்ற, “அல்லதும் முன்னும் பின்னும் நின் முன்னோ ரோம்பிய எயில்” என எயில்மேல் வைத்துரைத்தார் ; இதுபோது பேணப்படுவதும் அதுவே யாகலின், இவ்வாறு நின்னாலும் நின் முன்னோராலும் ஓம்பப்பட்டுவரும் எயிலிடத்தே நின் படையைப் புகப்படுக்கின், அதனாற் கேடு பெரிதாம் என்பார், “எயின்முகப் படுத்தல் யாவது” என்றார். இனிப் பழையவுரைகாரர், “கொடுத்த வென்பதற்குத் தந்தவென்பது இடவழுவமைதி” யென்றும், “கொடுத்த வெனவே கொண்டு கொடுத்தவெனக் கோடல் போந்த பொருளாய் விளங்கிற்” றென்றும், “தரப்பட்ட வென்பதனைத் தந்தவெனச் செயப்படுபொருளைச் செய்தது போலச் சொல்லிற் றாக்குக” வென்றும். “மன்னெயி லல்ல தென்புழி மன்னெயிற்கண் ஏழாவது விரித்து அதனைப் பின்வருகின்ற எயின் முகப்படுத்தல் என்ப திடமாகப் படுத்த லென்பதோரு சொல் வருவித்து அதனொடு முடிக்க” வென்றும், “முன்னும் பின்னுமென்றது முன்னோர் தாங்கள் இறப்பதற்கு முன்னும் இறந்ததற்குப் பின்னும் என்றவா” றென்றும், “பின்னோம்புதலாவது முன்னோர் தமக்குப் பின்னும் இவ்வரசாள்வாரும் நம்மைப்போல இவ்வாறோம்புகவென நியமித்து வைத்த” லென்றும், யாவதென்றது, “அஃது என்ன காரியம், நினக்குத் தருவதொன்றன் றென்றவா” றென்றும் கூறுவர். |