13 - 21. வளையினும் ............. களிறே. உரை : சினங்கெழு குரிசில் - சினம் பொருந்திய குரிசிலே ; வளையினும் - இவ்வெயில்வழிச் செல்லா தொழியின் வழி வளைந்து வளைந்து நீளுமாயினும் ; வ பிறி தாறு செல் மதி - பிறிதொரு வழியாகச் செல்வாயாக; எழூஉப் புறந் தரீஇ - கணைய மரத்தால் பின்னே வலி செய்யப்பட்டு ; பொன் பிணிப் பலகை ; இருப்பாணிகளால் இறுகப் பிணிக்கப்பட்ட பலகைகளால் இயன்ற ; குழூஉநிலைப் புதவிற் கதவு - பற்பல நிலைகளையுடைய கோயில் வாயிலிற் கதவுகளை ; மெய் காணின் - மெய்பெறக் கண்டால் ; தேம் பாய் கடாத்தொடு - வண்டினம் பாய்ந்துண்ணும் மதத்தால் ; காழ்கை நீவி - குத்துக்கோலை மதியாது சென்று ; வேங்கை வென்ற பொறிகிளர் - வேங்கை மரத்தைப் புலியென மருண்டு சிதைத்ததனாலுண்டாகிய வடுப்பொருந்திய ; புகர் நுதல் நின் களிறு - புள்ளியமைந்த நெற்றியினையுடைய நின் யானைகள் ; ஏந்து கை சுருட்டி - நிமிர்த்த கையைச் சுருட்டி ; தோட்டி நீவி - யானைமேல் வீரரேந்தும் தோட்டியைக் கடந்து ; மேம்படு வெல் கொடி நுடங்க - செருவில் மேம்படப் பொருது எடுத்த கொடியசையச் சென்று ; ஆங்குத் தாங்கலாகா - அம்மதிற் கதவுகளைப் பிளந்து அரண்களைச் சிதைக்குமாதலின் அப்பொழுது அவை அடக்குதற் காகாவாம் எ - று. சேரலாதன் செல்லக் கருதிய நெறியை மாற்றி வேறு நெறியிற் செல்லுமாறு கூறலின், தன் கருத்துக் கியையாமையால் சினங் கொளாமைப்பொருட்டு, “சினங்கெழு குரிசில்” என்றார். வளைந்துசெய்புரிசைக்குப் புறத்தே வளைந்து வளைந்து சேறல் வேண்டுமாதலின், “வளையினும்” என்றும், “பிறிதாறு சென்மதி” யென்றுங் கூறினார். எழு, கணையமரம். இது கதவிற்குப் பின்னே கிடந்து அதற்கு வன்மை தருவதாகும். பொன், இரும்பு ; அஃதாவது ஆணி . மதிற்கோபுரம் பல நிலைகளையுடையதாதலால், குழூஉநிலை யெனப்பட்டது. பகைவருடைய அரண் கதவுகளைக் கண்டபோது அவற்றைப் பாய்ந்து சிதைத்த பயிற்சியுடைமையான், இக்கதவினைக் காணினும் அது செய்யும் என்கின்றாராதலின், “கதவு மெய் காணின்” என்றார். வேங்கைமர மொன்றைச் சேய்மையிற் கண்ட துணையானே, வேங்கையெனக் கருதிச் சென்றழிக்கும் இயல்புடையவை நின் களிறு என்பார், “தேம்பாய் கடாத்தொடு காழ்கை நீவி, வேங்கை வென்ற பொறிகிளர் பூநுதல்” என்றார். வேங்கை, வேங்கைமரம். பொறி, ஈண்டு வேங்கையொடு பொருதவழி அதன் கொம்புகளால் உண்டாகிய வடு. யானை மதிற் கதவைத் தாக்குங்கால் தன் கையைச் சுருட்டித் தாங்குமென்றற்கு, “ஏந்துகை சுருட்டி” என்றும், தோட்டியால் யானை வீரர் அடக்கினும் அடங்காவாகும் என்பார், “தோட்டி நீவி, கொடி நுடங்க, தாங்கலாகா” என்றும் கூறினார் ; “கூங்கை மதமாக் கொடுந்தோட்டி கைந்நீவி” (பரி. 10 : 49) என்று பிறரும் கூறுதல் காண்க. |