துறை : காட்சி வாழ்த்து. வண்ணமும் தூக்கும் அது. பெயர் : நில்லாத் தானை. 12 - 17. நிலம் ................................ கிழவோயே. உரை : நிலம்தப இடூஉம் ஏணிப் புலம் படர்ந்து - பகைவர்க்குரிய நிலப்பகுதி குறைபடுமாறு அவர் எல்லைக்குட்பட்ட நிலத்தே சென்று பாசறை வகுத்து ; படுகண் முரசம் நடுவண் சிலைப்ப - ஒலிக்கின்ற கண்ணையுடைய போர் முரசம் பாசறை நடுவே முழங்கி வீரரை யேவ ; தோமரவலத்தர் - வலக்கையில் தண்டேந்தி;நாமம்செய்ம்மார்-போரினைச் செய்தற்காக ; ஏவல் வியம் கொண்டு - அம் முரசொலியின் ஏவலை மேற்கொண்டு ; இளையரொடு எழு தரும் ஒல்லார் - அணிவகுக்குப்பெற்ற இளைய வீரருடன் செல்லும் தானைத் தலைவர் முதலாகிய பகை வேந்தருடைய ; யானை காணின் - யானைப்படையைக் கண்டால்; நில்லாத் தானை - நொடிப்போதேனும் நில்லாது சென்று தாக்கும் தானைகளையுடைய ; இறை கிழவோய் - அரசனாந் தன்மையைத் தனக்கே யுரிமையாக வுடையவனே எ - று. பகைவர் எல்லைக்குட் புகுந்து அவர் நிலப்பகுதியை வளைத்துப் பல்வகைப் படை தங்குதற்கும் பாசறைக்கும் இடஞ் செய்து கொள்ளுங்கால் பகைவர் எல்லை குறைவதால், “நிலம்தப இடூஉம் ஏணிப் புலம்” என்றார் . எல்லையைச் சார்ந்த இடம் ஏணிப் புலம் எனப்பட்டது . ஏணி, எல்லை ; “இடாஅ வேணி யியலறை” (பதிற். 24) என வருதல் காண்க. ஏணிப்புலம் படர்ந்து என வரையறுத்துக் கூறியதனால், பாசறை வகுத்தல் பெறப்பட்டது . இனிப் பழையவுரைகாரர், நிலந்தப விடூஉம் ஏணிப்புலமெனற்து, “நிலவகலம் குறைபட விட்ட வெல்லையையுடைய பாசறை யென்றவாறு” என்பர். பாசறையுள் இருக்கும் வேந்தன் குறிப்பறிந்து தெரிவித்தல் வேண்டுமாதலின், முரசம் பாசறை நடுவண் இருந்து முழங்குவதாயிற்று. போர்க்கு ஏவிய குறிப்புத் தோன்றும் முழக்கம் கேட்டதும் படைவீரர் அனைவரும் போர்க்கெழுதல் கூறுவார், “படுகண் முரசம் நடுவண் சிலைப்ப” என்றார். தோமரம், தண்டு. “தண்டுடை வலத்தர் போரெதிர்ந் தாங்கு” (பதிற். |